வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு மரண அடியாக இருக்கும். திமுக தனிப்பெருபான்மையுடன் ஆட்சியமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது போல சட்டப்பேரவை தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இதை வைகோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இந்நிலையில், மதிமுக சூளுரை நாள் நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளிக்கையில்;- வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச்சின்னம் பெற்று போட்டியிடும். திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது. எந்தவிதமான சுருதி பேதத்துக்கும் இடமில்லை. பதவிகளுக்காக வாழவில்லை, லட்சியங்களுக்காக வாழ்கிறேன் என்பது லட்சக்கணக்கான என் தொண்டர்களுக்கு தெரியும். 

என்னை பற்றி ஒரு சில பத்திரிகைகள் நஞ்சை கக்குகின்றன. அதில் எழுதப்பட்டதில் எள்ளளவும் உண்மையில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு மரண அடியாக இருக்கும். திமுக தனிப்பெருபான்மையுடன் ஆட்சியமைக்கும், மு.க.ஸ்டாலின் முதல்வரானார் என வைகோ கூறியுள்ளார்.  ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனும் தனிச்சின்னத்தில் போட்டியிடபோவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.