10-ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு செய்வதில் கிரெடு முறையை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
விடுத்துள்ளது, இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிவரம்:- கொடூரமான கொரோனா வைரசிலிருந்து மாணவர்களை காப்பாற்றும் பொருட்டு மாணவர்களின் நலன்கருதி 2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கிய மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டி மகிழ்கின்றோம். அதேநேரத்தில் காலண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் என்ற  அரசின் முடிவு மாணவர்களுக்கு பேரிடியாய் இறங்கியுள்ளது.

 

அதாவது, மாணவர்கள் மென்மேலும் முயற்சிக்க தூண்டும் வகையில் பொதுத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் காலமாகவே காலாண்டுத் தேர்வு அமையும். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி அதன்பிறகு மூன்றுதிருப்புத் தேர்வுகளையும் சிறப்பாக எழுதி அதுவும் அரசுத்தேர்வு போலவே நடத்தப்பட்டு மதிப்பீடு செய்வதால் அனைத்து மாணவர்களுமே அதில் தேர்ச்சி மட்டுமல்ல அதிகமதிப்பெண் பெறுவார்கள் என்பதை அனைவரும் அறிவர். ஆனால்  தற்போதைய முடிவு அந்த மாணவர்களை பெரிதும் பாதிக்கும். எனவே  அரையாண்டு மற்றும் மூன்று திருப்புதல் தேர்வுகளையும் சேர்த்து அதில் எதில் அதிக மதிப்பெண் பெறப்பட்டிருக்கிறதோ அதை மதிப்பெண்ணாக கணக்கீடு செய்ய வேண்டுகிறோம். 

மேலும் வருகைப்பதிவு 20 விழுக்காடு அனைத்து மாணவர்களுக்குமே வழங்கிட அரசு ஆவண செய்யவேண்டும். ஏனெனில்,  நன்கு படிக்கும் மாணவர் கூட குடும்பச் சூழல், நோய் தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு விடுப்பு எடுத்திருந்தால் அம்மாணவர்களின் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. எனவே பாரபட்சமின்றி அனைவருக்குமே 20 விழுக்காடு மதிப்பெண் வழங்கவேண்டும். மேலும்,  அரசுபள்ளிகளில் EMIS மூலமாக அனைத்து தகவல்களுக்கு பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் மதிப்பெண்கள் முறை மூலம் எப்படி மதிப்பெண் வரும் என்ற குழப்பமும், அச்சமும் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில்  ஏற்பட்டுள்ளது. ஆகையால் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது மனஉளைச்சல் ஏற்படாமல் இருக்க மதிப்பீடு முறையை (GRADE SYSTEM) கடைபிடிக்க ஆவண செய்தும், தேர்வு முடிவுகள் குறித்து தெளிவான நெறிமுறைகள் வழங்கி உதவிட ஆவண செய்யுமாறும்  மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.