வரும் 30-ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சென்னை ஓய்எம்சிஏ திடலில் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு திமுக நிகழ்ச்சி நடக்கிறது. காங்கிரசின் குலாம் நபி ஆசாத், தேவகவுடா, சரத்பவார், பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், நாராயணசாமி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அமித்ஷா நலம் விசாரித்து சென்றார். 

பிறகு கடந்த 16-ம் தேதி அன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து டெல்லி சென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் நடைபெற்ற வாஜ்பாய் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். இந்த நிலையில், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். 

இரு தலைவர்கள் மறைவையடுத்து பாஜக-திமுக இடையே நெருக்கமான உறவு இருந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முரசொலி பவளவிழா, அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக அழைக்கப்படவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்திருப்பது உள்நோக்கம் இருப்பதாக அரசியல் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.