கொரோனா தொற்று தீவிரமாக உள்ள நிலையில் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே இனி பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்த அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :- தமிழக அரசு ஐந்தாவது முறையாக கடந்த ஜூலை 1-ஆம்  தேதி முதல் 31-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கினையும்  ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுடன் கூடிய ஊரடங்கு உத்தரவினை நீட்டித்துள்ளது. இதில் இம்மாதத்தில்  உள்ள நான்கு (05 ,12,19,26, ஆகிய தேதியில்) ஞாயிற்றுகிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வற்ற  முழு ஊரடங்கு உத்தரவை சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிவரை பிறப்பித்துள்ளது. 

எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களும் இன்று சனிக்கிழமை நள்ளிரவு   12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை  நள்ளிரவு 12 மணி வரை  பொதுமக்களுக்கான பெட்ரோல் டீசல் விற்பனையினை  தமிழக அரசின் ஆணையின்படி வழங்குவது இல்லை என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் தமிழக அரசு அறிவித்துள்ளபடி அவசரத் தேவைகளுக்காகவும்  அத்தியாவசிய தேவைகளுக்காகவும் (ஆம்புலன்ஸ் , பால் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை ) பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள் குறைந்த எண்ணிக்கையிலான விற்பனையாளர்களை கொண்டு  இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை (06.07.2020 ) முதல் தமிழகத்தின் அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்க முடியும் என்பதை தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. 

 

மேலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பல்வேறு சேல்ஸ் ப்ரோமோஷன் என்ற பெயரில் விற்பனை மேம்பாட்டு நிகழ்வுகளை நடத்தி வருகின்றது. இதன் மூலம் விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே சமூக இடைவெளி பின்பற்ற முடியாமல் நோய் தொற்று ஏற்படுகின்ற அபாயம் நிலவுகின்றது. ஆகவே அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக இது போன்ற நிகழ்வுகளை விற்பனை நிலையங்களில் கொரோனா காலம் முடியும் வரை நடத்திடக் கூடாது என்பதை தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வேண்டிக்கொள்கிறது. என அதில் கூறப்பட்டுள்ளது.