இந்த உதாரணம் தலையிலடிக்க வைக்கலாம், ஆனால் நுணுக்கமாய் கவனித்தால் அதிலிருக்கும் அரசியல் புரியும்.“கிழங்கு மசாலாவை பூரியோடு சேர்த்து சாப்பிடையில் கொண்டாடும் உலகம், சோற்றில் போட்டு பிசைய சொன்னால் துப்பிவிட்டு செல்லும்.”

ஒரு பொருள் அது இருக்க வேண்டிய இடத்தில், அதற்குரிய அம்சங்களுடன் இருந்தால்தான் அதற்கு மரியாதை. அது தன் இயல்புக்கு சற்றும் சம்பந்தமில்லாத எதிர்நிலைக்கு எஜமானாக ஆசைப்பட்டால், இருக்கும் மரியாதையும் அத்துக்கிட்டு போய்விடும் அச்சம் அதிகமிருக்கிறது. 

கிட்டத்தட்ட இந்த நிலையில்தான் இருக்கிறது ரஜினி, கமலின் அரசியல் விஷயம்! அவர்கள் அரசியல் அவதாரம் எடுக்கிறேன் பேர்வழியென்று அடிக்கும் கூத்தை தமிழகத்தில் பெரும்பாலோர் விரும்பவில்லை என்றே தகவல். ஹீரோக்களாக கொண்டாடப்படும் அவர்கள் தலைவர்களாக மதிக்கப்பட வாய்ப்பே இல்லை, இப்போது வரை கூடும் கூட்டமெல்லாம் அவர்களின் முகத்தில் மிச்சமிருக்கும் பவுடர் கோட்டிங்குக்காகவே! என்கிறார்கள். 

ஏன் ரஜினி, கமலின் அரசியலை ஏற்பகவில்லையாம் மக்கள்?... இதற்கு விமர்சகர்கள் சொல்லும் விளக்கம், “விஜயகாந்திடம் பட்ட அடியை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இரு திராவிட கட்சிகள் மீதும் ஊழல் விமர்சனம் உச்சத்தில் இருந்த போது விஜய்காந்த் வந்தார். ‘கடவுளோடும், மக்களோடும் மட்டுமே கூட்டணி’ என்று அவர் சொன்ன மாற்று அரசியல் தத்துவம் மக்களுக்கு பிடித்தது. அதனால்தான் அவரது கட்சியின் வாக்கு சதவீதம் 11ஐ தாண்டியது. 

ஆனால் என்று அவர் தேர்தல் லாபத்துக்காக மிக சாதாரண அரசியல்வாதியாக உருவெடுத்தாரோ அன்றே அவரை தலையில் தட்டி உட்கார வைத்துவிட்டனர் மக்கள். விஜயகாந்தால் உருவாக்கப்பட்ட இந்த வெறுப்பு ரஜினி, கமல் இருவர் மீதும் காட்டிடவே மக்கள்  உத்தமமாய் இருக்கிறார்கள். 

தடாலென கட்சி துவங்கிவிட்ட கமல் தனது செயலுக்கு சற்றும் பொருந்தாமல் பொது வாழ்க்கையில் பேசிக் கொண்டிருக்கிறார். அடித்தட்டு மக்களின் பிரச்னை பற்றி தினந்தோறும் பேசினாலும் மனிதர் வலம் வருவதோ ஹைடெக் மேடைகளில். ‘பென்ஸ் காரில் வலம் வருபவருக்கு எப்படி எங்களின் பஸ் நெரிசல் பிரச்னை புரியும்?’ என்கிறான் சாமான்யன். அதேபோல் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் விமர்சனங்களை சம்பாதித்து வைத்திருக்கும் கமல்ஹாசன், பெண் பாதுகாப்பு அதுயிதுவென பேசுவதை மக்கள் சுத்தமாக ரசிக்கவில்லை. கமலுக்கென தனி வாக்கு வங்கியெல்லாம் உருவாக வாய்ப்பேயில்லை. 

அதேபோல் நெடுங்காலமாக அரசியல் பேசிவரும் ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சி துவங்காத நிலையில், அவரது சினிமா அரசியலை மக்கள் அடியோடு வெறுக்கிறார்கள்.நடிகர் ரஜினிக்கு ஜே! போடும் கூட்டம், நிச்சயம் அரசியல் ரஜினியை ‘போ’! என்றுதான் சொல்லும். 

அவரது அவசர முடிவுகள், பாதியில் விட்டுச் செல்லும் குணம், சூழலுக்கு சம்பந்தமில்லாத முடிவுகள் பிரயோகம், திராவிடத்துக்கு ஒத்துவராத ஆன்மிக போகஸ் என்று ரஜினியை ஏற்றுக் கொள்ளாத நிலைக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. 

இதையெல்லாம் தாண்டி, தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக உருமாற்றியிருக்கும் ரஜினிகாந்தால் அதற்கு சரியான தலைமையை கூட நியமிக்க முடியவில்லை. யாரோ ஒரு வயதான நபர் நியமிக்கப்பட, அவரோ நீண்டநாள் ரசிகர் மன்ற நிர்வாகிகளை தூக்கிவீசிவிட்டு பணமுடைய புதிய நபர்களை நியமிக்கிறார். கேட்டால் ‘வெறும் ரசிகர்களை வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியுமா?’ என்கிறார். 

ஆக கட்சி துவக்கும் முன்பேயே தன் விசுவாசிகளை தூக்கி வீச தயங்காத ரஜினி, அரசியலுக்கு வந்த பின் ஆதரித்தோமென்றால் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள நமக்கு எதிராக எதையும் செய்ய மாட்டார் என்பது என்ன நிச்சயம்?என கேட்கிறார்கள். 

ஆக ரஜினி, கமல் இரண்டு பேரையும் கூத்தாடிகளாக பார்த்து கைதட்டும் மக்கள் அவர்களை தங்கள் குடுமியை ஆட்டி வைக்கும் தலைவனாக ஏற்க தயாரில்லை. இது சுத்த பேத்தல், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சினிமாவிலிருந்து வந்துதானே அரசியலை ஆண்டார்கள்? என்று கேட்கலாம். அப்போதைய ஆசியல் சூழல் வேறு, மக்களின் பொது அறிவு நிலை வேறு, மீடியா உள்ளிட்டவற்றின் குணாதிசயமே வேறு! ஆனால் இந்த காலத்தில் இது பலிக்காது!” என்று நிறுத்துகிறார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்தான்.