நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த சிவசாகியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பாறைகளை உடைப்பதால் ஏற்படும் அதிர்வுகள் காரணமாக கேரளத்தின் இடுக்கி அணையும், தமிழகத்தின் முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும். அணுக்கழிவுகளைக் கெண்டு வந்து இந்த ஆய்வகத்தில் கொட்டுவார்கள். அமெரிக்காவில் உள்ள பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்து செயற்கை நியூட்ரான்கள்,இந்த ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்படும்.

இந்த திட்டத்திற்கு தேனி மாவட்ட மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான எதிர்ப்பைப் போலவே நியூட்ரினோ திட்டத்திற்கும் தமிழக அளவில் கடும் எதிர்ப்புகள் நிலவுகின்றன. நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு நடைப்பயணத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ தொடங்கினார். மதுரையில் துவங்கிய இந்த நடைப்பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

வைகோவின் இந்த நடைப்பயணம் தொடங்கும் முன்பாக, சிவகாசியைச் சேர்ந்த ரவி என்ற மதிமுக தொண்டர் தீக்குளித்தார். உடனடியாக ரவியை, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொண்டர் ஒருவர் தீக்குளிப்பதைப் பார்த்து கண்ணீர் விட்ட வைகோ, தொண்டர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அதே நேரம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவியை நேற்று சந்தித்த வைகோ, மனைவி, குழந்தைகள் என்னைப் பற்றி எல்லாம் யோசித்து பார்த்தாயா? உன் மனைவி, குழந்தைகளுக்கு என்னப்பா பதில் சொல்வேன்? என்று கண்ணீர் விட்டு கதறினார்.

தொடர்ந்து ரவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் ரவியை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரவி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் மதிமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.