டி.என்.பி.எஸ்.சி  தேர்வுமுறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்  கிராமப்புற பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களின் அரசு வேலைவாய்ப்பை பறிக்கும் செயல்  என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 13.02.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை இனி கிராமப்புற பின்தங்கிய மாணவர்கள் வேலைவாய்ப்பு கனவாகவே போய்விடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை  பழையத் தேர்வுமுறைதொகுதி 4 மற்றும் தொகுதி 2A தேர்வுகளுக்கு பொதுஅறிவுத் தேர்வு மட்டுமே இருந்துவந்தது. தற்போது, முதனிலைத்தேர்வு மற்றும் முதன்மைத்தேர்வு என்று இருநிலைத்தேர்வு அறிவித்திருப்பது தவறான முடிவாகும். இதனால் கிராமப்புற ஏழை போட்டித்தேர்வர்களும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு போட்டித்தேர்வர்களுமே பாதிக்கப்படுவர். 

இருநிலைத் தேர்வு என்பது பணம்படைத்தவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெறுவர் ஏழைகள் என்னசெய்யமுடியும். தவிர இது பயிற்சி மையங்களுக்கே இலாபமாகும். முறைகேட்டைத் தவிர்க்க ஆதார், கைரேகை உள்ளிட்ட  மாற்றங்களை மேற்கொண்டிருப்பது வரவேற்புக்குரியது. அதே வேளையில்  போட்டித்தேர்வர்களின் தலையில் பாரம் ஏற்றுவதோடு இருநிலைத்தேர்வு  மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே அறிவிப்பை மறுபரிசீலனை செய்து ஏற்கனவே இருந்த பழைய தேர்வுமுறை அதாவது ஒருதேர்வுமுறையே அமல்படுத்திடவேண்டும்.  சீர்திருத்தம் என்ற பெயரில் போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களை தினம் தினம் மன உளைச்சளுக்கு ஆளாக்கி வருவது வருத்தமளிக்கிறது.  மேலும், இந்தியாவில் உள்ள மாநில தேர்வாணயங்களிலேயே "E" என்ற Option ஐ அறிமுகபடுத்தும் முதல் ஆணையம்டிஎன்பிஎஸ்சி மட்டுமே . 


 .

அதாவது கேள்விக்கு பதில் தெரியவில்லை என்பதற்கு E கருவளையத்தை டாட் செய்யவேண்டும். வாக்களிக்க விரும்பாதவர்கள்  நோட்டா பட்டனை அழுத்துவதுபோல. இந்தியாவில் உள்ள மாநில தேர்வாணயங்களிலேயே கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் "கொள்குறிவகைத்தேர்வில்" ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் வந்தால் கூட அந்தத்தேர்வே செல்லாது என்பது வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. கிராமப்புற தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட நலிந்தோரின்  அரசுவேலை கனவாகிப் போகுமென்பதால்  தமிழ்நாடு அரசுப்பணியாளர் ஆணையம் தேர்வுமுறை மாற்றத்தை கைவிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறது.