கற்றல்-கற்பித்தல் ஆய்வுக்குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கம் முதலமைச்சருக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவின் முழு விவரம் :- எதிர்வரும்  கல்வி ஆண்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள், ஏற்பட இருக்கும்  சிக்கல்களை எதிர்கொண்டு குழந்தைகளுக்கு அதனை சமாளித்து கற்றல்-கற்பித்தல்  சூழல்  உருவாக்க பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் ஒரு குழுவை அமைக்கப்படிருப்பது வரவேற்புக்குரியது. ஆனால்,
இக்குழுவில் மாணவர்களுடன் எப்போதும் தொடர்பிலிருக்கும் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் யாரும் இடம்பெறாதது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. மேலும் அனைத்து தரப்பினரையும்  இணைத்துக் கொண்டு இக்குழுவை விரிவுபடுத்தி ஆய்வை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் தற்போது,  அரசு குழுவை விரிவுபடுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது. விரிவாக்கப்பட்டக் குழுவிலும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் படிக்கும்  அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. 

உயர் அதிகாரிகள்,  சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகிகள், அதன் சங்கத்தலைவர்கள் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளார்கள்.  அரசுப்பள்ளி குழந்தைகளின்  சூழலை அறிந்து ஆய்வுக்கு உட்படுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கப்பிரதிநிகளையும் அதில் இணைத்துக்கொண்டால் மட்டுமே அதன்  பணி சாத்தியமாகும். மாணவர் கல்வி நலனில் அக்கறையுடன் செயல்படும் அரசு,  கற்றல் - கற்பித்தல் பணியில் தொடர் செயல்பாட்டில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கருத்துகளையும் நேரடியாக வழங்க வாய்ப்புகள் வழங்கவேண்டும். காலத்திற்கேற்ப பாட அளவு குறைப்பு,  கற்பித்தல் முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், நடைமுறை சிக்கல்களை தீர்த்தல் உள்ளிட்ட பல முடிவுகளை மேற்கொள்ள உள்ள இக்குழுவில், அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை இணைக்க வேண்டும்.  இக்குழு ஆசிரியர்,  பெற்றோர் அமைப்புகளுடன் இணைந்து கலந்தாய்வு நடத்தி அதன் பிறகு அரசுக்கு அறிக்கை சமர்பித்தல், அனைத்துத் தரப்பினரின் கருத்துளோடு உண்மை நிலவரம், மாணவர்களின் மனநிலை, சுற்றுச்சுழல், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதை  எதிர்கொள்ள வேண்டிய சவால்களை சமாளிக்க ஏதுவாக இருக்கும்.

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் இக்குழுவில் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் படி இயங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை குழுவில் இணைந்து, மாணவர் நலனை முன்னிறுத்தியும், அரசுப்பள்ளிகளை காப்பாற்றும் வகையில் முடிவுகள் மேற்கொள்ள ஆவனசெய்ய வேண்டும்.மேலும், விரிவுபடுத்தும் குழுவில் தமிழ் நாடு  ஆசிரியர் சங்கத்தையும் இணைக்கவேண்டுகிறோம். பேரிடர் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் அரசுக்கு 18 வகையான  கருத்துருக்கள் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மாநில அமைப்பான தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்,  தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைத்துவகை ஆசிரியர்களை உள்ளடங்கிய அமைப்பாகும். மேலும் கற்றல்-கற்பித்தல் சிறப்பாக நடைபெற  தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வசதியாக அனைத்து ஆசிரியர் சங்கப்பிரதிநிகளையும், பெற்றோர் சங்கப்பிரிதிகளையும் இணைத்துக் கொள்ளும் வகையில் ஆய்வுகுழு அமைய ஆவன செய்யவேண்டி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்  பணிவுடன் வேண்டுகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.