2016 சட்டமன்ற தேர்தலின் மூலம் அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வானவர்களில் ஒரு ஆச்சரிய நபரும் இருந்தார். அவர், தமிழகத்தின் டி.ஜி.பி.யாய் இருந்து ஓய்வு பெற்ற பூர்ணம் நடராஜ். ஜெ.,வின் தோழில் ஃபதர் சையது நியமன எம்.எல்.ஏ.வாக இருந்து அடக்கிவாசித்தது போல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரும் அடக்கியே வாசித்தார் ஜெ., இருந்த காலங்களில். அவரது மறைவுக்கு பின் கூவத்தூர் கூத்துக்கள், சசி டீம் ஆட்டங்கள், பன்னீரின் தர்மயுத்தம், இ.பி.எஸ். பதவியேற்பு, தினகரனின் அ.ம.மு.க. உதயம் என்று என்னவெல்லாமோ அக்கட்சியில் நிகழ்ந்த போதும் கூட சப்தம் காட்டவில்லை இவர். 

ஆனால் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி சதாய்த்த நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முடிந்து, மற்ற மாநிலங்களில் தேர்தலை பி.ஜே.பி. சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென திருவாய் மலர்ந்திருக்கிறார் நடராஜ். அதிலும் சாதாரண கரைவேஷ்டி எம்.எல்.ஏ.க்களை விட மிக அதிகமாகவே கைதட்டி, அ.தி.மு.க. அரசுக்கு புகழ்பாடி இருக்கிறார் இந்த மாஜி டி.ஜி.பி. 

அப்படி என்ன சொன்னார் நடராஜ்?.... “ஜெயலலிதாவுக்கு பிறகு எல்லோரும் அநாதைகளாகி இருக்கிறோம். ஆனால் அவர் உருவாக்கி கொடுத்த கொள்கையின் அடிப்படையில் செயல் திட்டங்களை  மிக மிக சிரத்தையோடு அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பெண்கள், கர்ப்பிணிகள் அனைத்து நலத்திடங்களுடனும் மேலும் புதிய திட்டங்களையும் இணைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. பெரும்பான்மை ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் கைகளில் இருப்பதால் இந்த தேர்தலில் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணியின் வெற்றியானது தற்காலிகமாக மறைக்கப்படுகிறது. 

மே 23-க்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சி இருக்காது எனும் ஸ்டாலினின் கனவு பலிக்காது. அவருடைய அப்பாவே கூட ஸ்டாலினுக்கு உடனடியாக துணைமுதல்வர் பதவி கொடுக்கவில்லை. அந்தப் பதவி கொடுக்கப்பட்ட நேரத்தில் அவரது குடும்பத்தில் அதிகளவு பிரச்னைகள் எழுந்தன. ஸ்டாலினின் பகல் கனவு தொடர்கிறது அவ்வளவே. தினகரன், சீமான், கமல் ஆகியோரின் அரசியலால்  தேர்தலில் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் கூட அ.தி.மு.க. வெல்லவே உதவி செய்யும் நிச்சயம். 

உள்ளாட்சி தேர்தலை கண்டு அ.தி.மு.க. பயப்படவேயில்லை. அந்த தேர்தலை எதிர்த்து வழக்கு போட்டது தி.மு.க.தான். எனவே எப்போது தேர்தல் வந்தாலும் எங்கள் கட்சி நின்று வெல்லும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ரஜினியின் வருகையையும் நான் வரவேற்கிறேன். எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று எந்த வருத்தமும் இல்லை. மக்கள் சேவையை தளராமல் செய்து கொண்டிருக்கிறேன். 

2011ல் வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது, 2014ல் வரலாறு காணாத வெற்றி, 2016ல் மீண்டும் வென்று ஆட்சியை தக்கவைத்தது...என்று தமிழக மக்களின் ஒரு அங்கமாகவே அ.தி.மு.க. மாறி நிற்கிறது. அந்த வகையில் இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வெல்லும். இது போக நாடு முழுக்க இருக்கும் மோடியின் செல்வாக்கு இதை உறுதி செய்கிறது.” என்று  பேசி முடித்திருக்கிறார்.

மாஜி காவல்துறை அதிகாரி நடராஜின் பேச்சு ஸ்டாலினை அதிகம் உசுப்பேத்தி இருக்கிறது.  தான் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வை எவர் எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டாடட்டும் தப்பில்லை. ஆனால், தேவையில்லாம தன்னை மிகவும் சீண்டி சேதாரமாக்க முயற்சித்திருப்பதை அவர் விரும்பவில்லை. எனவே கூடிய விரைவில் நடராஜுக்கு எதிராக அவரது தரத்துக்கு இணையான ஒரு தி.முக. நபரிடமிருந்து சுடச்சுட பதில் வந்து விழும்! என்கிறார்கள். வெயிட்டிங்!