காவிரி விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தமிழக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். 

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகிறது என தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேநேரத்தில், எந்தவித அதிகாரமுமில்லாத மேற்பார்வை ஆணையத்தை அமைக்காமல், அதிகாரமிக்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசை அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் வலியுறுத்துகின்றன.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்கட்சிகள் எம்.பிக்களை ராஜினாம செய்ய வலியுறுத்துகின்றன. ஆனால் அதிமுக அரசு நாடாளுமன்றத்தை முடக்கி மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து விடுகின்றனர். 

இந்நிலையில், பொதுப்பணிதுறை முதன்மை செயலாளர் பிரபாகரன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். 

மத்திய நீர்வளத்துறையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அவர்கள் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். 

தமிழகம் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்டேவை மாலை 5 மணிக்கு சந்தித்து ஆலோசிக்க உள்ளனர்.