மேற்படிப்பு பயிற்சிக் காலத்தை முடித்த தங்களுக்கு இன்னும் தேர்வுகள் நடைபெறாமல் இருப்பது மிகுந்த மன உளைச்சலை தருகிறது எனவும், தேர்வு எப்பொழுது நடைபெறும் என்ற தெளிவு இல்லாமல், கொரோனா பணிகளுக்கு இடையே தேர்வுகளுக்கு தயார் செய்யவும் முடியாமல் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக  கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிவரம்:- கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்கள பணியாளர்களாக தமிழ்நாடு பயிற்சி மருத்துவர்களும் பட்டமேற்படிப்பு மருத்துவர்களும் உயர் சிறப்பு மேற்படிப்பு மருத்துவர்களும் இரவும் பகலும் எங்கள் பணியை அனைவரும் பாராட்டும் விதத்தில் மேற்கொண்டு வருகிறோம். சங்கடங்கள் நிறைந்த இந்த இக்கட்டான நேரத்தில் அனைத்து நோயாளர்களையும் மிகவும் பரிவுடனும் கவனத்துடனும் அனுகி சிகிச்சை அளித்து வருகிறோம். தமிழகம் முழுவதிலுமிருந்து எம் டி, எம் எஸ், டிப்ளமோ ஆகிய படிப்புகளை முடித்த எங்களை அரசு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில்  பணியமர்த்தியது, அரசின் அறிவுறுத்தலையும் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் நோயாளிகள் பெருகுவதை கருத்தில் கொண்டும் நம்முடைய மக்களுக்கு பணியாற்ற சென்னைக்கு விரைந்தோம். 

ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் போக்குவரத்து இல்லாத காலத்திலும் நமது மருத்துவர்கள் அனைவரும் சிரமங்களுக்கு இடையிலும் தாமதமில்லாமல் பணியில் சேர்ந்தனர். இங்கே சென்னையில் நாங்கள் அனைவரும் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் கொரோனா வார்டுகளில் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சையையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து அவர்கள் நோயிலிருந்து விரைந்து குணமடைய உதவி புரிந்து வருகிறோம்.எங்கள் பணி முடித்து அனைவரும் அரசு ஏற்பாடு செய்திருக்கும் தனிமைப்படுத்தும் விடுதிகளில், ஹோட்டல்களில் தனிமையில் தங்கி இருக்கிறோம். இந்தப் பருவத்தில் எங்களுடன் பணியில் இருக்கும் சக மருத்துவர்களிடம் இருந்தும் விலகியே இருக்கிறோம். பணிக்காலத்தில் பல மருத்துவர்கள் கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களில் பலர் நோயிலிருந்து மீண்டு மீண்டும் கொரோனா வார்டுகளில் பணிக்கு சேர்ந்து இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இருந்தும் மேற்படிப்பு பயிற்சிக் காலத்தை முடித்த எங்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் இருப்பது மிகுந்த மன உளைச்சலை தருகிறது.தேர்வு எப்பொழுது நடைபெறும் என்ற தெளிவு இல்லாமல் கொரோனா பணிகளுக்கு இடையே தேர்வுகளுக்கு தயார் செய்யவும் முடியாமல் மிகுந்தவருத்தத்தில்உள்ளோம். 

எம்.டி, எம்.எஸ் தேர்வுகள் நடைபெறாததால் நம் மாநில மருத்துவர்கள் எய்ம்ஸ், டி.எம், எம்.சி.எச் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. அயராது உழைக்கும் நமது மருத்துவர்களுக்கு இது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. கொரோனா பணி, குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழுதல், நோய் தொற்று ஏற்படும் அபாயம் என்று பல்வேறு இன்னல்களிலும்மக்கள் பணியை செய்வதற்காக இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு பணியாற்றும் எங்களுக்கு இறுதி தேர்வுகள் குறித்த நிலையில்லாத சூழல் மிகுந்த மன வருத்தத்தை தருகிறது, முன் களப்பணியாளர்கள் என்றும், கோவிட் வாரியர்ஸ் என்றும் எங்களை கூறும் அரசு எங்களுடைய இந்த குறையை கனிவுடன் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும் பணியில் சேர்ந்துள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் ஒப்பந்த மருத்துவ அலுவலர்களுக்கு விரைந்து ஊதியம் வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறோம் என அதில் வலியுறுத்தியுள்ளனர்.