போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்திருந்த நிலையில் தற்போது படிக்காசை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

போராட்டம்

ஊதிய உயர்வு, நிலுவை தொகை, ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சில நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க போக்குவரத்து துறையில் நிதி இல்லாததால் முழுமையாக உடனே வழங்க முடியவில்லை என அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் காரணம் கூறி வந்தார். 

ஊதிய உயர்வு

இதனால் ஊழியர் போராட்டம் நீட்டித்து கொண்டே சென்றது. அப்போது பேசிய அமைச்சர் போக்குவரத்து துறையில் வேலை பார்ப்பவர்கள் சேவை மனப்பான்மையுடன் வேலை பார்க்க வேண்டும் என கூறி வந்தார். 

மேலும் அவர்கள் கேட்ட ஊதிய பேச்சுவார்த்தையில் அரசு கூறியதில் இருந்து சற்று ஊதியத்தை உயர்த்த அரசு முன்வந்தது. 

போராட்டம் வாபஸ்

மக்களின் நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் போக்குவரத்து ஊழியர்கள்.

பேருந்து கட்டணம் 

இதைதொடர்ந்து தற்போது திடீரென தமிழக அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 

இதற்கு காரணம் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு என தமிழக அரசு கூறியது. 

படிக்காசு குறைப்பு

இந்நிலையில் டிரைவர் மற்றும் கன்டக்டர்களுக்கு வழங்கப்படும் படிக்காசை குறைத்து தமிழக போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. 

பொதுவாக டிரைவர் மற்றும் கன்டக்டர்களுக்கு அவர்கள் வசூலிக்கும் தொகையில் ரூ.1000-க்கு 1.85 சதவீதம் என்ற அடிப்படையில் தினமும் படிக்காசு ரூ.16 வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது பேருந்து கட்டணத்தை மாநில அரசு உயர்த்தியதால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் படிக்காசை போக்குவரத்து கழகம் குறைத்துள்ளது. 

இனி படிக்காசு தினந்தோறும் ரூ. 1000-க்கு ரூ. 10.80 பைசா மட்டுமே வழங்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஊழியர்கள் அதிருப்தி

ஊதிய உயர்வை ஈடுகட்ட பேருந்து கட்டணம் உயர்த்தியுள்ள நிலையில் தமிழக அரசு திடீரென படிக்காசை குறைத்துள்ளதால் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.