தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? அல்லது தளர்வுகள் வழங்குவதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் வருகிற 29ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நினைத்து பார்க்காத வகையில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் 6,988 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் அளிக்கப்படாமல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பதா அல்லது மேலும் தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா சூழ்நிலை குறித்து காணொலி காட்சி மூலமாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கூறும் அறிவுரைகளை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.