கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் கவச உடையுடன் வாக்குசாவடி சென்று வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என  தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் கவச உடையுடன் வாக்குசாவடி சென்று வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகம் முழுவதும் 7,255 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அதில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்றும் 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,29,43,512 ஆக அதிகரித்திருப்பதாகவும் இதில் 3,09,95,440 பேர் ஆண் வாக்காளர்கள் என்றும் 3,19,40,880 பேர் பெண் வாக்காளர்கள் என்றும் 7,192 மூன்றாம் பாலினத்தவர்கள் என்றும் சத்ய பிரதா சாகு கூறினார். சி-விஜில் செயலி மூலம் 1,971 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 1,368 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தமாக ரூ.231.63 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிமம் பெற்ற 18,712 துப்பாக்கிகள் சம்மந்தப்பட்ட நபர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி கேட்ட 6,598 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 515 காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பரப்புரையின் போது முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்று பேசிய சாகு, சம்மந்தப்பட்ட இடங்களில் உள்ளூர் நிர்வாகங்கள் சார்பில் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருவதாகவும், இந்நடைமுறை வேட்பாளருக்கும் பொருந்தும் என்றும் விளக்கினார்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் கவச உடையுடன் வாக்குசாவடி சென்று வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 31-ம் தேதிக்குள் அனைவருக்கும் வீடு தேடி வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடும். இறுதியாக கொரோனா தொற்று மாநிலத்தில் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சத்யபிரதா சாகு, தமிழ்நாட்டில் நிலவும் சூழலை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.