பாஜகவுக்கு பயந்து வரும் அதிமுக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும் இவ்வளவு ஏன் 3 மாதத்திலும் கவிழலாம், 3 நாட்களிலும் கவிழலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதிடியாக தெரிவித்துள்ளார்

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடைசி நேரத்தில் தமிழக முதலமைச்சரும், , அமைச்சர்களும் டெல்லிக்கு சென்று நீட் தேர்வில் விலக்கு பெற முயற்சி செய்வது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தால் மட்டும் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்று தெரிவித்த திருநாவுக்கரசர், கடந்த 3 ஆண்டுகளில் பாஜக அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

மத்திய அரசைக் கண்டு மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்கள் பயப்படுவது இல்லை ஆனால்  தமிழக அமைச்சர்கள் பயப்படுவதற்கு காரணம் வருமான வரித்துறை தான் என்றும்  இதை வைத்தே பாஜக, தமிழக அமைச்சர்களை மிரட்டி வருகிறது எனவும் அவர்தெரிவித்தார்.

பாஜகவுக்கு தொடர்ந்து பயந்து நடுங்கி வரும்  அதிமுக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும்  இவ்வளவு ஏன் 3 மாதத்திலும் கவிழலாம் அல்லது  3 நாட்களிலும் கவிழலாம் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.