தமிழகத்தில் கொரோனா வைரஸ் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அது படிப்படியாக குறையும் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊரடங்கு குறித்து  நேற்று பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுக்கு உரையாற்றினார் அப்போது பேசிய அவர், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரிகள் மிக சிறப்பான முறையில் பணியாற்றியதன் விளைவாக வைரஸ் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தமிழகத்தில் இந்த வைரஸ் முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து பின்னர் அது உச்சத்தை அடைந்துள்ளது இது மீண்டும் குறைந்து கட்டுப்பாட்டுக்கு வரும் ,  வெளிநாடுகளிலும் அப்படித்தான் இந்த வைரஸ் ஆரம்பத்தில் சிறிய அளவில் தோன்றி இன்னர் வேகமாக பரவியது அதற்குப் பின்னர் அது கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது, அதேபோலத்தான் இந்தியாவிலும் தமிழகத்திலும் மிக வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தார். 

இந்த வைரஸ் ஆரம்பத்தில் உயர்ந்து பின்னர் கட்டுப்படும் என மருத்துவர்கள்  கண்டறிந்துள்ளனர், அரசு எத்தனை நடவடிக்கைகளை எடுத்தாலும்  இந்த வைரசை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது பொதுமக்களின் கையில்தான் உள்ளது , எனவே  அரசு அறிவுரைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் ,  அதேபோல மக்களிடமும் அதிகாரிகள்  இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் ,இந்த வைரசால் அரசுக்கு எத்தனை நெருக்கடிகள் இருந்தாலும் மக்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்கள் முறையாக தடையின்றி கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது . அனைவருக்கும் காய்கறி கிடைக்க வேண்டுமென்பதற்காக அரசாங்கமே தற்போது காய்கறி விற்பனையை தீவிரப்படுத்தியுள்ளது .  வீதிவீதியாக மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு காய்கறிகளை அரசு வினியோகம் செய்து வருகிறது .  மக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது .   தனிமனித இடைவெளி மற்றும் மாஸ்க் போன்றவற்றை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே வைரஸை கட்டுப்படுத்த முடியும் ,  ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அனைத்து ரேஷன் பொருட்களும் வழங்கப்படுகிறது . 

மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு மக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது . குறிப்பிட்ட தேதியில்  குறிப்பிட்ட நேரத்திற்கு ரேஷன் கடைகளுக்கு சென்றால் உங்களுக்கான பொருட்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் , தமிழகத்தைப் பொறுத்தவரையில் உணவு பஞ்சம் என்ற பிரச்சினைக்கே இடமில்லை . அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது ,மீண்டும் இரண்டாவது முறையும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது .அதுபோல வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து தங்கி பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் தேவையான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது .  ஆகவே ,என்னென்ன உதவிகளைச் செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் மக்களுக்கு அரசு செய்துள்ளது .அம்மா உணவகத்தில் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது .  அதேபோல வேளாண் பணிகளை பொருத்தவரையில் எந்த தடையும் கிடையாது  100 நாள் வேலைத் திட்டமும் தேவையான ஆட்களுடன்  செயல்பட்டு வருகிறது . 

ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் மக்கள் எவ்வித சிரமும் இன்றி வாழ அரசு உதவிகளை செய்துள்ளது .   அதேபோல மக்களின் தேவைக்காக தமிழகத்தில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன ,  அரசு மிக கவனமாக நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது .தமிழகத்தில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது .வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வேறு நாடுகளுக்கு செல்வதாக வந்த செய்தியின் அடிப்படையில் அந்த தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு இறங்கியுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் என ,  பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.