தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 

இதன்படி, வரும் பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. மார்ச் 4-ம் தேதி மாநகராட்சிகளுக்கான மேயர், நகராட்சி சேர்மன் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கடந்த ஜனவரி 27-ம் தேதி தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.

அதுமட்டுமின்றி அவர் எழுதிய கடிதத்திலும் அதன் தொடர்ச்சியாகவே இருக்கிறது என்றும் உடன்பிறப்புகள் கூறுகின்றனர். அதில், ‘ கூட்டணிக் கட்சிகளுக்கு சுணக்கமின்றி உரிய அளவிலான இடங்களை மனமுவந்து ஒதுக்க வேண்டும்.கூட்டணி கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில், கட்சியினரின் அணுகுமுறை அவசியம் அமைய வேண்டும். கூட்டணி கட்சிகளுடனான துாய நட்பு தொடர வேண்டும். 

கூட்டண கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்த பின், தி.மு.க., போட்டியிட உள்ள இடங்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்வு, ராணுவ வீரர்களை தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடனும், கண்டிப்பானதாகவும், கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும்’ என்று கடிதம் எழுதி இருக்கிறார். காணொளி வாயிலாக நடந்த கூட்டத்தில் பல்வேறு கட்டளைகளை மாவட்ட செயலாளர்களுக்கு கடுமையாக விதித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள்.

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘தேர்தல் நடக்கும் எல்லா இடத்துலயும் நம்மளோட வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு என்று உளவுத்துறை ரிப்போர்ட் என்கிட்ட இருக்கு. சும்மா நீங்க எப்போ பார்த்தாலும் ஈஸியா ஜெயிச்சிடலாம்னு மட்டும் தான் சொல்றீங்க. ஆனா அப்படி நடக்கிறதே இல்லை. குறிப்பா கொங்கு மண்டலத்துல வெற்றி வாய்ப்பு கம்மியா இருக்கு. அதை நாம முறியடிச்சு வெற்றி வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் கட்சியின் அதிரடி நடவடிக்கைக்கு யாராக இருந்தாலும் தயாரா இருக்கணும். 

மக்கள்கிட்ட நம்ம அரசு மேல எந்தவித குறையும் இல்லை. அதை நாம மக்கள்கிட்ட சொல்லி பிரச்சாரம் பண்ண வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலின் கறாராக உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். அதே போல கூட்டணி கட்சியினரை நன்றாக கலந்தாலோசித்து இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மொத்தத்தில் நம்முடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்’ என்று கூறுகின்றனர்.