காமராஜரையும், எம்.ஜி.ஆர்.ஐயும் மக்கள் இன்னும் ஏன் மறக்கவில்லை?  இருவரின் ஜனரஞ்சக அந்தஸ்து, கொண்டு வந்த திட்டங்கள் என்பதில் துவங்கிப் பல இருந்தாலும் கூட, ’சத்துணவு தந்த மகராசன்’ என்று ஒரு பெரிய காரணம் இருக்கிறது. இன்றளவும் காமராஜரின் பெயர் நிலைத்து நிற்கவும், எம்.ஜி.ஆர். பெயரை சொல்லி அ.தி.மு.க. ஓட்டுக்களை வாங்கிக் குவிக்கவும் இந்த ‘சத்துணவு’ தான் மூல காரணம். 

இதை, இந்த டெக்னிக்கைத்தான் கையில் எடுக்க இருக்கிறார் எடப்பாடியார். இதை வைத்துதான் அடுத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி  தேர்தல்கள் வந்தாலும் சரி அல்லது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் சரி! அடிச்சு தூக்கிவிடுவது என்ற நம்பிக்கையை இதன் மூலம் பெற்றுள்ளார்.நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலானது அ.தி.மு.க.வுக்கு பெரும் சரிவை தந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. என்னதான் ரகசிய வாக்கெடுப்பு  மூலம் உருவான பதவிகளை ஆளுங்கட்சி பிடித்திருந்தாலும் கூட, அவையெல்லாமே எந்த ‘ரூட்டில்’  கிடைத்தன என்பது அவர்களுக்கே நன்கு தெரியும். 

ஆனால் மக்களென்னவோ தி.மு.க.வுக்கு மிக அதிகமான பதவிகளை  வாக்களிப்பின் முலம் அள்ளிக் கொடுத்திருப்பதூ அ.தி.மு.க.வை அலற வைத்திருக்கிறது. இதனால் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் நடக்குமா? என்பது சந்தேகமாகி இருக்கிறது. அது நடக்காவிட்டாலும் கூட அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க. தயாராகியே தீர வேண்டும். எப்படி வெற்றி பெறுவது? என்று கையை பிசைந்து கொண்டிருக்கும் நிலையில்தான்  எம்.ஜி.ஆர். பாணியில் ’பள்ளி உணவு’ திட்டத்தை கையில் எடுக்கிறார் எடப்பாடியார்! என்கிறார்கள். 

அதாவது சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டமானது, இனி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது! என்கிறார்கள். அமைச்சர் வேலுமணி மற்றும் செங்கோட்டையன் இருவரும் போட்டுக் கொடுத்த சின்ன புள்ளியை வைத்து மிகப்பெரிய அளவில் கோலமே போட்டுவிட்டார் எடப்பாடியார்! என்கிறார்கள். அதாவது, அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் பெண்களின் சதவீதம் மிகப்பெரிது. நடுத்தர மற்றும் ஏழை குடும்ப பெண்கள்தான் இதில் அலாதி. இந்த வாக்கு வங்கிதான் லேசாக ஆட்டம் கண்டிருக்கிறது. எனவே இவர்களை மீண்டும் ஈர்க்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கொண்டு வரும் முடிவில் இருக்கிறாராம் எடப்பாடியார். சாதாரண  உணவாக இல்லாமல் காலை டிஃபனாக சப்பாத்தி, கிச்சடி, கேக் பூரி ஆகிய உணவுகளை மாற்றி மாற்றி வழங்கலாம்! எனும் யோசனையை  வேலுமணி மற்றும் செங்கோட்டையனிடம் ஆலோசித்திருக்கிறாராம். 

தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு காலையில் பள்ளியே உணவை வழங்குது, அதுவும் மிக தரமாக, சுவையாக வழங்குது என்பது மிகப்பெரிய வாக்கு வங்கியை குதூகலப்படுத்தும். அவர்கள் தங்களின் நன்றியை வாக்குகள் வழியே காண்பிப்பார்கள்! என்பதே எடப்பாடியார் போட்டிருக்கும் அசத்தல் ஸ்கெட்ச். முதல்வரின் இந்த முடிவானது, அரசல் புரசலாக வெளியே கசிந்து பரவ ‘அப்படி எந்த முடிவுமில்லை. வதந்தி’ என்று பொத்தாம் பொதுவாக மறுக்கப்பட்டது. ஆனால் நிச்சயம் இந்த திட்டம் விரைவில் அமலுக்காகும்! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆக! பூரி, கிச்சடி இதெல்லாம் எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக்குகிறதா? என்று பார்ப்போம்.