ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சிர்ஜித் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொதுமக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை தோண்டும்போதும் , மூடும்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் அதன் முழு விவரம் :-   

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் நடுக்காட்டு பட்டு கிராமத்தில் 25-10- 2019 அன்று பிரிட்டோ ஆரோக்கியராஜ் என்பவரின் நிலத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் அவருடைய இரண்டு வயது மகன் சிறுவன் சுர்ஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான்,  என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது.  இந்த செய்தி குறித்து அறிந்தவுடன் சிறுவனை உயிருடன் மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும்,  குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. சி.விஜயபாஸ்கர்.  மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திருமதி. வளர்மதி,  வருவாய் நிர்வாக ஆணையர் திரு. ராதாகிருஷ்ணன்,  மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டேன். 

எனது உத்தரவின் பேரில் மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இரவு பகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். சிறுவனை உயிருடன் மீட்பதற்காக அதி நவீன இயந்திரங்களைக் கொண்டு சிறுவன் சிக்கிக்கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகே புதிதாக ஒரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டும் பொழுது கடினமான பாறைகள் இருந்ததால் மீட்பு பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன .  சிரமங்களை எல்லாம் வல்லுநர் குழு உதவியுடன் சரி  செய்து குழந்தையை உயிருடன் மீட்க இரவுபகலாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன இருந்தும் சிறுவன் சுர்ஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது ஏற்கனவே ஆள்துளை கிணறு அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதிகளை வகுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இதில் கவனக்குறைவு ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். 

இனிவரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க,  பொதுமக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  மீட்புப் பணிகளை இரவுபகலாக மேற்கொண்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,  அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.  இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் வில்சன் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என தமிழக முதலமைச்சர் தனது  அறிக்கையில் தெரிவித்துள்ளார்