கொரோனா வைராஸ் பரவலை தடுக்க மாநில எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி காவல்துறை மற்றும் எல்லையோர மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.  பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து விடக்கூடாது என அவர் எச்சரித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 2 ஆயிரத்து கடந்துள்ளது . இந்நிலையில்  இன்னும் ஒரு சில நாட்களில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்,  அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் என்பது பெரும்பாலான மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது ,  ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அதைக் கட்டுப்படுத்துவது சவாலான பணி என அவர் தெரிவித்துள்ளார் .

 

மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகள் எடுத்த சிறப்பான நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலான நகர்புற கிராமப்புற பகுதிகளில்,  கொரோனா வைரஸ் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .  ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அதை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.  ஏனெனில் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய இடமாக இருப்பதே அதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார் .  பொதுமக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இதுவரை பொதுமக்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  ஆனால் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் வெளியில் வரும்பொழுது அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் ஆனால் பல இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிலை ஏற்படுகிறது என வருத்தம் தெரிவித்தார் .  அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது .  அதனால் ஏழை எளிய மக்களுக்கு அன்றாட உணவு உறுதி செய்யப்பட்டுள்ளது . 

அதே போல் விவசாய பொருட்களுடன் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் மறிக்கக் கூடாது ,  தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை,  விவசாயிகள் தங்கள் பணிகளை தொடர எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில்   பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து விடக்கூடாது எனவே மாநில எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.எனவே விவசாயிகளுக்கு எவ்வித தடையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார் ,  விவசாயிகள் அன்றாடம் உற்பத்திசெய்யும் காய்கறிகளை மார்க்கெட்டுகளுக்கு  எடுத்துச் சென்று விற்கலாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  குறிப்பாக எண்ணெய் ஆலை ,  அரிசி ஆலை ,  ஜவ்வரிசி முந்திரிப்பருப்பு போன்ற தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும்  எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார் .  அதேபோல் 100 நாள் வேலை திட்டத்தை எந்த தடையுமின்றி அமல்படுத்தலாம் அதற்கு எந்தத் தடையும் இல்லை ,  ஆனால் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுபவர்கள் அவசியம் முகக் கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் இதை  மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அதேபோல் 100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.மாநிலம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பதை தொடர்ந்து செய்யப்படும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.  அதேபோல தடை செய்யப்பட்ட பகுதிகளில் தினந்தோறும் இரண்டு முறை கிருமிநாசினிகள் நிச்சயம் தெளிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.  அதேபோல் அம்மா உணவகத்தில் தரமான உணவுகள் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது கோடைகாலம் என்பதால் கிராமப்புற நகர்ப்புற பகுதிகளில் மக்களுக்கு தடையில்லாத குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் ,  வைரஸ் பரவாத பச்சை நிறக் குறியீட்டு பகுதிகள்  என அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் படிப்படியாக தொழில் தொடங்குவதற்கு அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.