முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 2,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.  குறிப்பாக சென்னையில்தான் அதிகமான நபர்கள் கொரோனா பாதிப்படைந்துள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தவித்து வருகிறது. இதனிடையே, வரும் ஞாயிறு அன்று ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது.

இந்நிலையில், மே 2ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், சென்னையின் கொரோனா பரவல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம்  என்று கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பின்பு ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கட்டுப்பாடு தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே, பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியிருக்கும் நிலையில், வரும் சனிக்கிழமை தமிழக அமைச்சரவைக் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.