தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றாலும் 30 தொகுதிகளில் பாஜக வெல்வது உறுதி என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே காணிமடம் கனகபுரத்தில் 96.57 லட்சம் மதிப்பிலான சாலைப் பணியை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கஜா புயல் குறித்து மத்திய குழு சென்று ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பிறகு அமைச்சரவை கூடி முடிவெடுக்கும். டெல்லியில் அருண்ஜெட்லியிடம் கஜா நிவாரண நிதி தொடர்பாக பேசியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள காலம் கூட்டணி காலம். அதிமுக ஆரம்பித்த காலம் முதல் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்ததே இல்லை. இதேபோல் தி.மு.க.வும் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்தித்து வருகிறது. 

மேலும் தற்போது தமிழகத்தில் கூட்டணி சேர்ந்து தான் தேர்தலை அணுக வேண்டும் என்ற நிலையில் தான் அனைத்து கட்சிகளும் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி இருக்கும் வரை பெட்ரோல் விலை குறைந்து கொண்டே இருக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.