தேசத்தின் பிரதமர் மோடியைப் பொறுத்தவரையில் ‘வடக்கு வாழ்த்துது! தெற்கு தூற்றுது!’ நிலைதான் எப்பவும். அதிலும் தென்னிந்தியாவின் மிக முக்கிய மாநிலமான நம் தமிழகம் அவருக்கு எப்பவும் சிம்ம சொப்பனம்தான். இத்தனைக்கும் இந்த மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசை தன் பாக்கெட்டில் வைத்திருக்கிறது டெல்லி பி.ஜே.பி! என்று விமர்சிக்கப்படும் நிலையிருந்தும் கூட தமிழகம் என்னவோ மோடியின் கண்ணில் உறுத்தலைத்தான் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. 

எதற்கெடுத்தாலும் மோடியை திட்டி தீர்க்கும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் விமர்சகர்கள் கடந்த சில நாட்களாக ‘கஜா’ விஷயத்திலும் மோடியை போட்டுப் பொளக்கிறார்கள். புயல் வந்ததுக்கு நமோ என்னய்யா பண்ணுவாரு? என்று பி.ஜே.பி. ஆதரவாளர்கள் கேட்டால், ‘புயலை தடுக்கலைன்னு திட்ட நாங்க என்ன முட்டாளா? புயல் பாதித்த பகுதிகளை ஏன் பிரதமர் பார்வையிட வரலை? டெல்டா மீண்டும் கரையேறிட குறைந்தது பத்து வருடங்களாவது ஆகும்!’ எனுமளவுக்கு அங்கே நிலையிருக்குது. 

ஆனாலும் இந்த தேசத்தை ஆளும் பிரதமர் தன் மக்களில் ஒரு பகுதியினரான தமிழக டெல்டாவாசிகளை பார்க்க வந்திருக்க வேண்டாமா? இதைவிட என்ன பெரிய பணி? ஆயிரம் முக்கிய வேலைகள் இருந்தாலும் கூட இயற்கை பேரழிவான இதையும் அவர் கவனித்திருக்க வேண்டும் தானே? ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் தனக்கு எதிராக தொடர்ந்து முழங்கும் டெல்டா மக்கள் இப்போது அவதிப்படுவதை கண்டு ரசிக்கிறாரா மோடி, பழியெடுப்பதற்காக  பாராமுகம் காட்டுகிறாரா?’ என்று பொங்கியிருந்தனர். இதற்கு பி.ஜே.பி.யினரால் பதில் சொல்ல முடியவில்லை. 

ஆனால் அதேவேளையில் இன்னொரு விஷயத்தை இழுத்து வைத்து, விமர்சகர்களை வெளுக்கின்றனர் பி.ஜே.பி.யினர். “பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வரவில்லையென்று பிரதமர் மோடியை மட்டும் வாய்க்கு வந்தபடி, விஷம சொல்லெடுத்து திட்டும் கொழுப்பேறிய வாய்கள், ராகுலை மட்டும் வசதியாக மறப்பது ஏன்? கேரளாவில் பெரும் வெள்ளத்தால் பாதிப்பு உருவானபோது பறந்து வந்து பார்த்தாரே ராகுல்! அவர் இங்கு மட்டும் ஏன் வரவில்லை? அதை ஏன் யாருமே கேட்பதில்லை, வாய்மூடி கிடப்பது ஏன்? 

ராகுலை கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் பிரயாசப்பட்டு அழைத்துச் சென்று காட்டியது அம்மாநில காங்கிரஸ். ஆனால் தமிழக காங்கிரஸ் ஏன் அவரை டெல்டாவுக்கு அழைக்கவில்லை? அழைத்தும் கண்டு கொள்ளவில்லையா அவர்? ம.பி, ராஜஸ்தான் தேர்தல்கள்தான் முக்கியம் என்று இருந்துவிட்டாரா?” என்று தாறுமாறாக தாக்கியிருக்கின்றனர். டியர் சத்தியமூர்த்திபவன் சகோஸ், இதற்கு உங்கள் பதிலென்னவாம்?