பிராமணர்களைப் பற்றி அவதூராக கருத்து வெளிப்படுத்திய ஜி5 உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  இந்த வெப் சீரிஸ்க்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  ஜீ 5 ஓடிடியில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்  காட் மேன் என்ற வெப்  சீரிஸ் வெளியாக உள்ளது.  டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடரின் டீசர்  சில தினங்களுக்கு முன்பு வெளியானது.  இந்த இணையதள தொடரின்  டீசர் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும்,  இந்து மதத்தை தவறாக சித்தரிக்க முயலும் ரீதியிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டீசர் தொடங்கும் போதே " பிராமணாள் மட்டும் தான் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்கு " என்ற வசனமும்,   காவி உடையில் சாமியாராக வரும் ஜெயப்பிரகாஷ் சொல்லும் "என்ன சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியனுங்களா இருக்கானுங்க " என்ற வசனமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த டீசரின் முடிவில் டேனியல் பாலாஜி மற்றும் அவரது நண்பர் இருவரும் மது அருந்தும் போது "நீ பிராமணன் ஆக போறியா" என நக்கலாக சிரிக்கிறார் அவரது நண்பர். இப்படி அனல் பறக்கும் வசனங்களுடன் வெளியான இந்த வெப் தொடர் வருகிற ஜூன் 12ம் தேதி ஜீ5-ல் வெளியிடப்பட உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. 
 இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஜீ5 தொலைக்காட்சி நிறுவனத்திற்காக காட்மேன் என்கிற திரைப்படம் வெப்  சீரியஸில் முதலில் வெளியிட உள்ளனர்.  இப்படத்தின் முன்னோட்டத்தினைப் பார்த்தபோது , இப்படத்தில் பிராமண சமூகத்தினை இழிவுபடுத்தும் வகையிலும், பிராமணர் மீது வெறுப்பு ஏற்படுத்தும் நோக்கத்திலும் ஹிந்து சமய அடையாள சின்னங்களுடன் விரசமான காட்சிகளுடனும் மற்றும் ஹிந்து ஒற்றுமையினை திட்டமிட்டு குலைக்கும் அடிப்படையிலும் கதை அமைப்பு காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பவை தெரிய வருகின்றன . இந்தப் பட தயாரிப்பினை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. 

கருத்துரிமையை கெட்ட உள்நோக்கத்துடன் தவறாக பயன்படுத்தி அனைத்து சமூகங்களின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முற்பட்டுள்ளனர்.  இந்திய குற்ற தண்டனை விதி தொகுப்பு IPC பிரிவுகள் 153A, 295A மற்றும் 298 ஆகியவைகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் புரிந்து வரும் இப்படம் சம்பந்தப்பட்டவர்கள் மீது,  தமிழக அரசும், தமிழக காவல்துறையும் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்பதோடு, இப்படத்தினை எந்த ஊடகத்திலும் வெளியிடக்கூடாது என்றும் உடனடியாக தடை செய்திட வேண்டும் என்றும்  தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்திக் கோருகின்றது. இந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதல்வர்,  மாண்புமிகு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். சமூகங்கள் இடையேயான நல்லிணக்கம் மற்றும் இந்து ஒற்றுமையின் அவசியத்திற்கு பாடுபடுவோரும் , இப்படத்தினை தடை செய்திட கோரி முன் வர வேண்டுமென்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.