காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கி, 8.20 மணிக்கு ரிசல்ட் வெளியாகத் துவங்கிய போது அது திமுகவிற்கு அவ்வளவு சாதகமாக இல்லை.

தமிழகத்தில் திமுகவிற்கு ஆதராவன மிகப்பெரிய அலை உள்ளது. திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது  உறுதி. எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படு தோல்வி அடைவார். குறைந்தது 220 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்றெல்லாம் ஆரூடங்கள் சொல்லப்பட்டு வந்தன. கருத்துக்கணிப்புகளும் கூட அப்படியேத்தான் வெளிவந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தது. கடந்த 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பிற்பகல் 2 மணி வரை 2021 தேர்தல் இருந்தது என்றே சொல்லலாம். ஆனால் பிற்பகல் 2மணிக்குப்பிறகு நிலவரம் மாறியது.

தேர்தலில் திமுக வென்றுவிடும் என்றும் தனிப்பெரும்பான்மை எளிமையாக வந்துவிடும் என்றும் பிரசாந்த் கிஷோர் டீம் மு.க.ஸ்டாலின் தரப்பிடம் கூறியிருந்தது. எனவே அந்த நம்பிக்கையுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் போன்றோர் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பிற்பல் 2 மணி வரையிலான நிலவரம் திமுகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்கிற வகையிலேயே இருந்தது. ஊடகங்களில் பேசிய திமுக பேச்சாளர்கள் கூட தனிப்பெரும்பான்மை இல்லை என்றாலும் திமுக கூட்டணி அரசு அமைப்பது உறுதி என்று பேச ஆரம்பித்தனர்.

எனவே 2006ம் ஆண்டைப்போல காங்கிரஸ் ஆதரவு திமுகவிற்கு தேவை என்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தது. ஆனால் பிற்பகல் 2மணிக்கு பிறகு திமுக வேட்பாளர்கள் பலர் பின்னடைவில் இருந்து மீண்டு முன்னிலை வகிக்க ஆரம்பித்தனர். அதோடு திமுக வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த பல்வேறு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்த காரணத்தினால் தான் திமுகவால் பிற்பகல் 2மணி வரை பெரும்பான்மை பலத்தை எட்ட முடியாமல் இருந்தது- வழக்கமாக 117 தொகுதிகளை முன்னிலை நிலவரம் கடந்தால் அந்த கட்சி அடுத்து ஆட்சி அமைக்கிறது என்ற தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியுஸ் வெளியிடுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை திமுக ஆதரவு ஊடகங்கள் கூட அப்படி செய்தி ஒளிபரப்பவில்லை. இதற்கு காரணம் பிற்பகல் 2 மணிக்கு பிறகு திமுக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்தால் பல்வேறு தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது. இதனால் திமுகவிற்கு எப்போதும் ஆதரவாக செய்தி ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் கூட அமைதி காத்தன. இதே நிலை தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்குள்ளும் இருந்தது. தேர்தல் முடிவுகளை தனது மகன், மருமகன் குடும்பத்தோடு அமர்ந்து ஸ்டாலின் கேட்டுக் கொண்டே இருந்தார் என்கிறார்கள். ஒரு கட்டத்தில் திமுக 108 இடங்களில் முன்னிலை அதிமுக 100 இடங்களில் முன்னிலை என்கிற செய்தி வெளியாகிக் கொண்டிருந்த போது ஸ்டாலின் முகம் வாட்டமானதாக சொல்கிறார்கள்.

பிறகு பிற்பலுக்கு பிறகு லீடிங் 130ஐ தாண்டி பிறகே ஸ்டாலின் பெருமூச்சு விட்டதாக கூறுகிறார்கள். இதே போல் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனும் கூட பிற்பகல் வரை கலக்கத்துடன் தான் அமர்ந்திருந்தார் என்கிறார்கள். திமுகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பது போன்றே முடிவுகள் வந்து கொண்டிருந்தன. இது அவரை மிகவும் இருக்கமான மனநிலையில் வைத்திருந்தது என்கிறார்கள். ஆனால் பல்வேறு தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் பிரச்சனை என்கிற தகவல் வந்த பிறகு அதனை சரி செய்ய சபரீசன் களம் இறங்கினார்.

இதே நேரத்தில் அதுவரை பின்தங்கியிருந்த திமுக வேட்பாளர்கள் பலர் முன்னிலைக்கு வந்திருந்தனர். இதனால் லீடிங் பிற்பகலுக்கு பிறகு 130ஐ கடந்து ஒரு கட்டத்தில் 160ஐ நெருங்கியது. இதன் பிறகே ஸ்டாலின் பெருமூச்சு விட்டதாகவும், சபரீசன் ஆசுவாசம் அடைந்தததாகவும் சொல்கிறார்கள்.