தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மீது ‘அதீத உரிமையும், அதிகாரமும் எடுத்துக் கொள்கிறார்!’ என்று பொதுவான குற்றச்சாட்டு அக்கட்சிக்குள் உண்டு. கழகத்தின் உயர்மட்ட நிர்வாகிகளின் இந்த வருத்தத்தை அன்று கருணாநிதியோ, இன்று ஸ்டாலினோ ஒரு பெரிய பிரச்னையாகவே எடுத்ததில்லை. ஆனால் அங்கே கைவைத்து, இங்கே கைவைத்து இப்போது தங்கள் தலையிலேயே துரை கைவைத்துவிட்டு குட்டிவிட்டார் என்று குமுறுகிறது கருணாநிதியின் வாரிசுகள் வட்டாரம். 

 

பிரச்னை இதுதான்... தமிழக சட்டசபையில் நேற்று கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் எதிர்மறை வாசகங்கள் எதையும் கொட்டாமல் மிக மிக நேர்மறையாகவும், பெருந்தன்மையுடனும் முதல்வர், துணை முதல்வர் இருவரும் பேசினர். ஆனால் தி.மு.க. சார்பில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டுவிட்டு பின் தனக்கும் அவருக்குமான பாசத்தையெல்லாம் குறிப்பிட்டவர், ஒரு இடத்தில் “பிள்ளைகளை வைத்து பெற்றோரை எடை போட முடியாது. அவர்கள் விட்டு சென்ற பணிகளை வைத்துதான் எடை போட முடியும். அந்த வகையில் கருணாநிதி வரலாற்று சிறப்பு மிக்க அரிய காரியங்களை செய்துள்ளார்.” என்றார். 

இதை மன்றத்தினுள், முட்டும் கண்ணீருடன் அமர்ந்திருந்த ஸ்டாலின் பெரிதாய் கவனிக்கவில்லை. ஆனால் டி.வி.யில் பார்த்த கருணாநிதியின் வாரிசு குடும்பத்தினர் பொங்கிவிட்டனராம். ‘ஸ்டாலினின் அரசியல் எழுச்சிக்கும், தியாகத்துக்கும், வெற்றிக்கும், புகழுக்கும் என்ன குறை?’ என்று அவரது சகோதரி செல்வி கடுப்பாகி இருக்கிறார். 

அழகிரியின் குடும்பத்தினரோ “கருணாநிதி நலமோடு இருந்து அரசியல் பண்ணிய காலத்திலேயே தென் தமிழக தி.மு.க.வை கட்சியின் கோட்டையாக மாற்றிக் காட்டியது நீங்க.  உங்க தம்பியோட அரசியல் திறமையை நாம விட்டுக் கொடுக்க கூடாது இந்த நேரத்துல ஆனா இந்த மனுஷன் என்ன இப்படி ஓவரா பேசுறார்?’ என்று காட்டமாகி இருக்கின்றனர். 

சி.ஐ.டி. காலனியில் ராஜாத்தியம்மாளும், ’துரைமுருகனுக்கு ஓவர் இடம் கொடுக்குறதை உங்க அப்பா காலத்துலேயே எனக்கு பிடிக்கலை. இன்னைக்கு பாரு, உன்னையையும் சேர்த்துத்தானே இப்படி இடிச்சுப் பேசுறார், இதுக்கு அவசியமென்ன இருக்குது? இவரை இனியாச்சும் கண்டிச்சு வைக்க சொல்லி அவர்கிட்ட (ஸ்டாலின்) பேசு.’ என்றிருக்கின்றார். தமிழரசு,  செல்வியின் கணவர் முரசொலி செல்வம், அமிர்தம் என ஒட்டுமொத்த குடும்பமும் இந்த விஷயத்தில் துரைமுருகனுக்கு எதிராக கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். 

இந்த தகவலை துரையின் காதில் நேற்று இரவு வாக்கில் சீனியர்புள்ளி ஒருவர் சொல்ல, சற்றே ஷாக்கானவர் “நான் பொதுவாதானே சொன்னேன். தளபதிக்கு என்னை தெரியும். தப்பா நினைக்க மாட்டார்.” என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் சட்டசபையின் வரலாற்றில் அழுத்தமாக பதிந்த நேற்றைய நிகழ்வில் துரைமுருகனின் இந்த வார்த்தையும் ஆவணமாகிப் போனது கருணாநிதியின் வாரிசுகள் தங்கள் மீதான கரும்புள்ளியாகவே பார்க்கின்றனர்!