எதிர்கட்சிகளை ஏகபோகமாக, எசகுபிசகாக புரட்டி எடுத்து விமர்சிப்பதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு போட்டியாக இன்னொருவர் பிறந்து வரவேண்டும்! என்கிற அளவுக்கு நிலைமை போய்விட்டது. அந்தளவுக்கு மனிதர் தாறுமாறாக  வைத்து வெளுத்து எடுக்கிறார் விமர்சனங்களில். கட்சி பேதமில்லாமல் எதிரணியில் எல்லாரையுமே ராஜேந்திரபாலாஜி விமர்சித்தாலும் கூட சமீபத்தில் அவரிடம் சிக்கி, வகையாக வாங்கிக் கட்டியிருப்பது ராகுலும்,சோனியாகாந்தியும்தான்.

‘ராகுலை யாருடைய மடியில் உட்கார வைத்து காது குத்தினார்கள், மொட்டை போட்டார்கள்?’ என்று கேட்டாரே ஒரு கேள்வி, காங்கிரஸ் பிரஷரானது. அதோடு விட்டாரா ராஜேந்திர பாலாஜி? சோனியாவையும் பற்றி செம்ம தாக்கு தாக்கிவிட்டார். சோனியாவின் சொந்த நாடு இத்தாலி என்பதை சுட்டிக்காடி, ராஜேந்திர பாலாஜி பேசிய வார்த்தைகள் காங்கிரஸ்காரர்களை கடுப்பின் உச்சத்துக்கு கொண்டு போய் உட்கார வைத்துவிட்டன. தமிழக  அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிராக அவரது சொந்த மாவட்டத்தில் அவரது உருவ பொம்மையை எரித்தனர் காங்கிரஸார். இந்த நிலையில் புதுவை காங்கிரஸோ ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக துள்ளிக் கிளம்பியுள்ளது. அமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் அவரை விளாசி தள்ளியுள்ளனர். 

புதுச்சேரி காங்கிரஸ் தலைவரும், அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாஅயம் “ஏதோ தான் தான் மேதாவி, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கனத்தோடு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி வருகிறார். ஒரு பெண் என்றும் பாராமல் சோனியாவை விமர்சித்துள்ளார். அரசியல் நாகரிகத்தை மறந்து அவர் பேசியிருப்பதை கண்டிக்கிறோம். 
ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும். இதேபோன்று தொடர்ந்து விமர்சித்தால், அரசியல்ரீதியான விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும்.” என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார். 

இளைஞர் காங்கிரஸாரும் தங்கள் இணைய பக்கங்களில் ராஜேந்திர பாலாஜியை மிக கடுமையாக விமர்சித்துள்ளனர். அதில் ஒருவர் “தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனசும், நாக்கும் கெட்டுப்போய்விட்டது.” என்றிருக்கிறார். 
அமைச்சரின் கவனத்துக்கு!