அதிமுகவை, பாஜக உடைக்க முயற்சிப்பதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலாகவின் கணவர் நடராஜன் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில், நடராஜன் பாஜகவை தாக்கி பேசிய்யுள்ளார். ஆவியை பார்த்து பயப்படுவதை போலவே காவியை பார்த்து பயப்படுவதாக எண்ணி காவி மயமாக்கப்படுகிறது என்றும் கூறி இருக்கிறார்.

மேலும், அதிமுகவை, பாஜக உடைக்க பார்க்கிறது, குழப்பம் விளைவிக்க பார்க்கிறது மத்திய அரசு, பாஜகவை இங்கு வளர விடமாட்டோம் என்றெல்லாம் கூறியுள்ளார்.

ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி ஏன் இப்படி அரண்டுபோய் பேசுகிறது என்று எனக்கு தெரியவில்லை. அது மட்டுமல்ல எந்த விதத்தில் குழப்பம் விளைவிக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் உடைக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் அவர்களின் உட்கட்சி பிரச்சனையில் நாங்கள் தலையிடுகிறோம் என்பதற்கான ஆதாரங்களை சொல்லிவிட்டு அவர் இந்த குற்றச்சாட்டை கூறட்டும்.

ஜனநாயக முறைப்படி அந்த கட்சியில் எந்த குழப்பமும் வந்து விடக்கூடாது என்ற காரணத்துக்காக முதல்வர் ஜெயலலிதா இறந்த உடனே, அந்த நடு இரவிலேயே, கவர்னர், அவர்களுக்கான பதவி பிரமாணத்தை செய்து வைத்தார்.

குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றால், சுயலாபம் பெற வேண்டும் என்றால் அன்றே அது பாஜகவால் செய்திருக்க முடியும். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை, அந்த கட்சியின் அடிப்படையில் எந்த அதிகாரமும் இல்லாத நடராஜன் எப்படி சொல்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை.

ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்கலாம் என்று இவரே சொல்கிறார். அதிகாரப்பூர்வமான ஆட்சியில் இருக்கும் பாஜகவும் அதைத்தான் சொல்கிறது. ஆனால், முதல்வராக பன்னீர்செல்வம், நீடிப்பதை பற்றி இவர் முடிவு எடுப்பதை போலவே பேசுகிறார். இதனால், இந்த குழப்பம் யாரால் ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்றாக உணர்வார்கள்.

பாஜகவை பார்த்து இவர்கள் பயப்படுகிறார்கள், முற்றிலுமாக அவர்களின் பொங்கல் விழா நோக்கமே பாஜகவை குறிவைத்து பேசுவது என்பதே, பாஜக தமிழகத்தில் அவர்களுக்கு சவாலாக இருக்கிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

எங்களை பொறுத்தமட்டில் தமிழகத்தை வளர்ச்சி மையமாக்க வேண்டும். அதற்கு எங்களை வளர்த்து எங்களை வளர்ச்சி அடைய செய்து எங்கள் கட்சியை உறுதியாக்கி நாங்கள் அதை அடைவோமே தவிர, இன்னொரு கட்சியை உடைத்து, அதை அடைவதற்கான அவசியம் பாஜகவிற்கு இல்லை.

நூற்றாண்டை கொண்டாடவிருக்கும் எம்ஜிஆர் உயிரோடு இருந்தால், பாஜகவை தான் ஆதரித்து இருப்பார். ஜெயலலிதா இருந்தாலும் கூட இன்று பாஜகவை தான் ஆதரித்து இருப்பார்.

பாஜகவை பார்த்து, ஏன் இவர்கள் இப்படி பரிதவிக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. பாஜகவின் உண்மை தன்மையை விளக்க வேண்டியது என்னுடைய கடமை என்பதற்காகவே நான் இந்த பதில் அறிக்கையை தருகிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.