பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை எச்சரிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
 மதுரையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, அமாவாசை தினத்தன்று கட்சிக் கொடி ஏற்றி நிர்வாகிகள் பெயரை கமல் அறிவித்ததை கடுமையாக விமர்சித்தார். மேலும் பகுத்தறிவுவாதி என்று கூறிக் கொள்ளும் கமல் அமாவாசை அன்று கட்சி ஆரம்பித்ததுடன், அமாவாசை அன்றே கட்சிக் கொடியையும் ஏற்றியதை தமிழிசை சுட்டிக்காட்டினார். இதன் மூலம் கமல் ஒரு போலி பகுத்தறிவுவாதி என்று தெரியவந்துள்ளதாகவும் தமிழிசை கடுமையாக விமர்சித்தார். மேலும் கடவுள் இல்லை என்பார் கமல் ஆனால் தொண்டர்களை வைத்து தன்னை ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்றெல்லாம் அழைக்க வைப்பார், இது தான் பகுத்தறிவா என்றெல்லாம் தமிழிசை கேள்வி எழுப்பியிருந்தார்.  இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தமிழிசை விமர்சனம் குறித்த கேள்வியை கேட்டதுமே கமல் டென்சன் ஆனதை பார்க்க முடிந்தது. மேலும் நான் பகுத்தறிவுவாதி தான். ஆனால் என்னுடன் இருக்கும் அனைவருமே பகுத்தறிவுவாதி என்று கூற முடியாது. நான் மூட நம்பிக்கையை ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை. ஏழ்மையை ஒழிக்கவும், ஊழலை ஒழிக்கவுமே அரசியலுக்கு வந்துள்ளேன். என்னை ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று அழைக்கிறார்கள் என்பது பழைய விமர்சனம். இனி என்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். அதே சமயம் என்னை போலி பகுத்தறிவுவாதி என்று தமிழிசை எப்படி கூறலாம்? என்னை போலி பகுத்தறிவுவாதி என்று கூற தமிழிசைக்கு உரிமை கொடுத்தது யார்? இவ்வாறு கோபத்துடன் கேட்டுவிட்டு கமல் விமான நிலையத்தில் இருந்து வேகமாக சென்றார்.