ஆட்சியில் இருக்கும்போது மணல் திருட்டை தடுக்காதவர் இப்போது மணல் திருட்டு பற்றி பேசுவதா என மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்விஎழுப்பியுள்ளார்.

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறியதாவது:-
அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு தமிழகத்தை மிரட்டுவதாக கூறுகிறார். அதனால் தான் முதலில் எதிர்த்த ஜெயலலிதா பின்னர் தமிழக அரசு செயல்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றுவதால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயந்து தி.மு.க. இதனை எதிர்க்கிறது. அதேபோல் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் போராட்டங்களை அறிவித்திருப்பது இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான். 

மோடி கருப்பு பணத்தை ஒழித்து நேர்மையான ஆட்சிக்கு வழிவகுத்தது போல் 3 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலும் நேர்மையாக நடைபெற வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகள் அடங்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. 

ஒரே அதிகாரி 5 துறைகளை கவனித்து வருகிறார். இதனால் நிர்வாகம் சீர்கெட்டுவிடும். இந்த விசயத்தில் தமிழக அரசு அதிக அக்கறை எடுத்து செயல்பட வேண்டும்.

மீத்தேன் திட்டத்தால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. ஆனால் மீத்தேன் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த தி.மு.க. தற்போது நாங்கள் போராடியதால்தான் மீத்தேன் திட்டத்தை தடுத்தோம் என்று கூறுகின்றனர். 

பல்வேறு கருத்துக்களை மு.க.ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசி வருகிறார்.ஆட்சியில் இருந்தபோது மணல் திருட்டை தடுக்காமல் தற்போது பேசுவது சரியல்லை. அப்போது மணல் திருட்டை தடுக்காமல் எங்கே சென்றார்கள்? இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.