ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கட்டாயம் சட்டரீதியாக தீர்வு கிடைக்கும் , நிச்சயம் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காட்டாயம் நடக்கும் நம்புங்க என்று இந்த முறையும் தமிழிசை பேச்சை மாற்றாமல் அதே தொணியில் பேசியுள்ளார்.

மத்தியில் ஆளும் தேசிய கட்சியில் உள்ள மாநில தலைவர்கள் நிலை எப்போதும் பரிதாபம் தான். மத்திய அரசு எடுக்கும் நிலைபாடு நன்றாக தெரிந்திருந்தாலும் எதுவும் செய்யமுடியாமல் சப்பை கட்டு கட்ட வேண்டிய நிலையில் தான் மாநில தலைவர்கள் நிலை உள்ளது. 

இதனால் பல மாநிலங்களில் தேசிய கட்சிகள் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்களில் இதுதான் நிலை. மாநில உரிமைகள் விஷயத்தில் தேசிய கட்சிகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறு வேறு நிலை எடுக்கும் போது இன்னும் சிக்கல் அதிகமாகிறது.

தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி உள்ளது அதன் தலைவர்களுக்கு நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு கிடையாது. எப்போது கேட்டாலும் ஒரே பேச்சு தான். அதே போன்று மத்திய அமைச்சராக இருக்கும் பொன்னாருக்கும் இதே நிலைதான். 

எப்போது கேட்டாலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என்றே சொல்வார். ஆனால் மத்திய அரசின் நிலை வேறு. இது தெரிந்தும் தமிழிசையும் , பொன்னாரும் ஏன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறார்கள் என்றால் மற்றவர்கள் மறதியின் மேல் இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான் காரணம். 

கடந்த ஆண்டும் இதே போல் தமிழிசை , பொன்னார் , மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் போன்றோர் திரும்ப திரும்ப ஜல்லிக்கட்டு நடக்கும் தமிழகத்துக்கு ஜல்லிக்கட்டை கொண்டு வருவோம் என்று அடித்து சொன்னார்கள்.

ஆனால் மத்திய அரசின் நிலை வேறாக இருந்தது. கோர்ட் தீர்ப்பை காரணம் காட்டியது. அதனால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. காளைகளை காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க சொல்லி வைக்கப்படும்  கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு புறக்கணிக்கிறது. 

இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் நம்புங்க நிச்சயம் வரும் சட்டபூர்வமான தீர்வு வரும் என்று தமிழிசையும் பொன்னாரும் மாற்றி மாற்றி சொல்லிகொண்டிருக்கின்றனர்.

இன்றும் பேட்டி அளித்த தமிழிசை நிச்சயம் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடக்கும் சட்டபூர்வ தீர்வு கிடைக்கும் அட நம்புங்க என்கிற ரீதியில் பேட்டி கொடுத்துவிட்டு டெல்லி கிளம்பி சென்றார். அவரிடம் யாரும் மேடம் அது என்ன காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மட்டும் மத்திய அரசு கோர்ட்டை மதிக்காது , ஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டும் கோர்ட்டு மேல் அவ்வளவு மதிப்பு என்று கேட்கவில்லை.