தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வேலூரில் நடந்த கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

ரிசர்வ் வங்கியில் இருந்து ஏன் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பெற்றீர்கள் என்று கேட்கிறார்கள். பொருளாதார மேதை என்று கூறப்பட்ட ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது 5 முறை ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் பெற்றுள்ளார்.

சிதம்பரம் மத்திய அமைச்சராக  இருந்து தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. முதலமைச்சர்  கூறியதுபோன்று அவர் நாட்டுக்கு பாரமாகத்தான் இருந்துள்ளார். பொருளாதார பின்னடைவை சரிசெய்ய என்ன முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்வது வரவேற்கத்தக்கது. ஆனால் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் முதலமைச்சர்  வெளிநாடு செல்வதால் என்ன பயன் என்று கேட்கிறார்கள்?. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் வெளிநாடு செல்கிறார்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும். தமிழ்நாட்டில் எதை எடுத்தாலும் அரசியலாக்குகிறார்கள். அதற்கு தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது. நாம் மக்கள் நலனுக்காக ஆதரவு தெரிவிக்கிறோம் என்று தமிழிசை தெரிவித்தார்.

முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “மோடியின் அடுத்த இலக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான். மோடி செல்லும் இடமெல்லாம் விருது பெற்று வருகிறார். 

தவறு, ஊழல்செய்தவர்கள் மோடி ஆட்சியில் தப்பிக்க முடியாது. ப.சிதம்பரத்துக்கு திகார் ஜெயில் தயாராகி வருகிறது. அவருடைய குடும்பமே ஜாமீன் குடும்பமாக விளங்குகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தவறு செய்து விட்டார். ஒரு கட்சிக்கே தலைவராக இருக்க முடியாதவர் எப்படி நாட்டின் பிரதமராக வரமுடியும்? என தமிழிசை கேள்வி எழுப்பினார்.