ஓட்டுக்கு பணம் கொடுப்பதை திமுக நிறுத்த  திருமங்கலம் பார்முலா கண்ட ஊழல்வாரிசுகள் தயாரா என்று திமுக எம்.பி. கனிமொழிக்குக் காட்டமாகக் கேள்வி எழுப்புகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை தோற்கடித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், வேலூர் தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துவருகிறார்கள். 
தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்ததைக் குறிப்பிட்டு வேலூர் தேர்தல் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். இதுபற்றி திமுக எம்.பி.யும் அக்கட்சியின் மகளிர் அணி தலைவியுமான கனிமொழியிடம் தூத்துக்குடியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கனிமொழி, “தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு, திமுகவின் வெற்றியை பாஜக விமர்சித்தால் பராவாயில்லை” என்று தெரிவித்தார். 
கனிமொழியின் இந்த விமர்சனத்துக்கு ட்விட்டர் மூலம் தமிழிசை பதிலடி தந்திருக்கிறார். “ஓட்டுக்கு பணம் கொடுப்பதை திமுக நிறுத்த திருமங்கலம் பார்முலா கண்ட ஊழல் வாரிசுகள் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி - தமிழிசை போட்டியிட்டதிலிருந்தே இருவரும் கருத்து மோதலில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.