தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா? என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளோம். இதில் பங்கேற்க கூட்டணி கட்சியினர், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அக்கறை உள்ளது. தமிழக மக்களை நாங்கள் என்றும் மதிக்கிறோம். தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். 

தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை, பல திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரிவினை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். இந்த தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பது என்றால் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பாஜகவினர் அக்கறை கொண்டவர்கள்.

 

தூத்துக்குடி தவிர வேறு எங்கு சென்றாலும் ஜெயித்து இருப்பேன் என்ற மனநிலை எனக்கு கிடையாது. எனக்கு வாக்களித்த அனைவருக்கும் தூத்துக்குடி மக்களுக்கும் என்றுமே நன்றியுடையவளாக இருப்பேன். அடுத்த வாரம் அங்கு ஒரு மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறேன். தமிழகத்தை சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது மோடி கையில்தான் உள்ளது என தமிழிசை கூறியுள்ளார்.