tamilisai says her party will contest election in special and uniqueness

ஆர்கே.நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று பாஜக., சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, தாங்கள் தனித்துப் போட்டியிடுவது குறித்து அவர் ஒரு பெரிய விளக்கம் அளித்தார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானதுமே, திமுக., அதிமுக., உள்ளிட்ட பிரதான கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி விட்டன. இந்நிலையில், தேமுதிக., ஒதுங்கி கொள்ள, மதிமுக., ரொம்ப நாள் யோசித்து யோசித்து, ஏற்கெனவே தீர்மானித்திருந்தபடி திமுக.,வுக்கு தானாக முன்வந்து ஆதரவைத் தெரிவித்தது. 

இந்நிலையில், அதிமுக.,வை பின்னிருந்து இயக்குவது பாஜக.,தான் என்று ஒரு கருத்து பொது வெளியில் பகிரங்கமாக உலாவந்தது. இதனால், பாஜக.,வும் அதிமுக.,வும் தனித்தனியே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தங்களை தனிப்பட்ட வகையில் அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை பாஜக.,வுக்கு எழுந்தது. அதுபோல், அதிமுக., எம்பி., மைத்ரேயனும், ஆர்.கே.நகரில் பாஜக.,வுக்கு ஓட்டு வங்கி கிடையாது. அதிமுக.,வின் வெற்றிக்கு பாஜக.,வால் எந்த விததிலும் உதவ இயலாது என்றார். 

இந்நிலையில் தான், பாஜக., தங்களுக்கு தொகுதியில் ஓட்டு வங்கி இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டியதற்கு பதில், போட்டியிட வேட்பாளர் இருக்கிறாரா என்று காட்ட வேண்டிய நிலைக்கு வந்தது. இதனால், இதோ நான் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசையே முன் வந்தார். ஆனால், அடுத்து என திருப்பங்கள் நிகழ்ந்ததோ, அக்கட்சியின் சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே இந்தக் கரு.நாகராஜன் யார் என்று பார்த்தால், அவர் முன்னர் நடிகர் சரத் குமாருடன் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பின்னர் பாஜக.,வுக்கு வந்தவர். அவ்வாறு வந்தவருக்கு கட்சியில் ஒரு பதவியைக் கொடுத்து, போட்டியிட வாய்ப்பும் கொடுத்துவிட்டது பாஜக., இதனை மேலிடம் அறிவித்ததாகக் கூறி வாழ்த்து தெரிவித்தார் தமிழிசை சௌந்தர்ராஜன். 

இதனிடையே, இன்று பாஜக., சார்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் கரு.நாகராஜன். மேலும், விஷால் போட்டியிடுவது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். அப்போது, விஷாலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் தான் என்று கூறிய தமிழிசை, எத்தனை சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அதில் ஒருவர் தான் விஷால் என்று கூறினார். 

மேலும் அவர், பாஜக தனித்து விடப் படவில்லை, தனித் தன்மையுடன் போட்டியிடுவதாக விளக்கம் அளித்துள்ளார். வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிப்பதற்கான சூழ்நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார் தமிழிசை. 

தங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருந்து இப்போது பாஜக.,வில் இருக்கும் கரு.நாகராஜனுக்கு ஆதரவு தெரிவிக்காமல், முதலில் திமுக.,வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, இப்போது யாருக்கும் ஆதரவு இல்லை என்று தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் சரத்குமார். அவர் கூட பாஜக., வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவிக்க வில்லை என்பதுதான்... பாஜக.,வின் தனித்தன்மையோ?