மக்களவை தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்து இருப்பது பாஜகவுக்குப் பாதகமில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' எனக் கூறி மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை’’ என ரஜினிகாந்த தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

 

பாஜகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ’’மக்களவை தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை நேர்மறையான கருத்தாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

அஜித், ரஜினி அறிக்கை வெளியிட்டால் உடனே பா.ஜனதாவுக்கு எதிரானது என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள். ரஜினியின் அறிவிப்பு பாரதிய ஜனதாவுக்கு எதிரானது கிடையாது. மத்தியில் வலுவான ஆட்சி செய்வது, தண்ணீர் பிரச்சனையை தீர்த்தது யார்? என மக்களுக்கு தெரியும். எனவே மக்களவை தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு சரியான முடிவுதான். ரஜினி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்த உடன் பாஜகவுக்கு இழப்பு ஏற்படுமா என கேட்பது வறுத்தமாக உள்ளது.

பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அது யாருடைய ஆதரவுக்காகவும் காத்திருக்கவில்லை. அஜித் அறிக்கை விட்டால் அது பாஜகவுக்கு பேரடி, ரஜினி அறிக்கை விட்டால் பாஜக.,வுக்கு சறுக்கல் என யார் அறிக்கை விட்டாலும் அது பாஜகவுக்கு பாதகம் என கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது. 

நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது உண்மை தான். ஆனால் ரஜினி ஆதரவு தந்தாலும், தராவிட்டாலும் பாஜக.,விற்கு எந்த இழப்பும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெறும். அதோடு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என ரஜினி அறிவித்திருப்பது சிறந்த முடிவு’’ என அவர் தெரிவித்துள்ளார்.