தூத்துக்குடியில், மே 15ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவுடன் திமுக பேசி வரும் தகவல் உண்மைதான் என்று கூறினார். ராகுல் காந்தியைப் பிரதமராக முன்மொழிந்து ஸ்டாலின் பேசி வரும் நிலையில் தமிழிசை இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழிசை கூறியதை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருப்பதாகவும், நிரூபிக்கத் தவறினால் மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகுவார்களா என்றும் சவால் விடுத்தார்.

ஆனால், தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் தான் அந்தக் கருத்தைக் கூறியதாக தமிழிசை அன்றே மீண்டும் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் தமிழிசையின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். 

நேற்று இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், பொய் பேசக்கூடாது பாப்பா என்று பாரதியார் பாடியிருந்தார். அதை தமிழிசை படித்திருப்பார். அதை பாப்பாக்களுக்கு மட்டும் அவர் சொல்லவில்லை. ஆனால் தமிழிசையும், மோடியும் பொய் பேசுவதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என சாடியிருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, முத்தரசனின் விமர்சனத்துக்குப் பதிலளித்தார். நாங்கள் பொய் பேசவில்லை; திமுகவுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வேண்டுமானால் பொய் பேசுவது பழக்கமானதாக இருக்கலாம் என்ற அவர், “நான் பொய் பேசும் பாரம்பரியத்திலிருந்து வரவில்லை. ஊழல் செய்யும் பாரம்பரியத்திலிருந்து வரவில்லை. நான் எதாவது சொன்னால் அதற்கு ஏதாவது காரண காரியம் இருக்கும். அரசியலில் சில கணக்குகளை வைத்து, எனக்குக் கிடைத்த சில தகவல்களை வைத்து நான் அதைச் சொன்னேன்.

ஓர் அரசியல் கட்சித் தலைவர் அதை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவருடைய விருப்பம். அரசியலில் நேர்மையையும், ஒழுக்கத்தையும், நாணயத்தையும் கடைப்பிடிப்பவள் நான் என்றார். தமிழிசையின் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆதாரத்தை எப்போது கொடுக்க வேண்டுமோ? அப்போது கொடுப்பேன். நீங்கள் கேட்கும் நேரத்தில் என்னால் கொடுக்க முடியாது, எப்போது தேவைப்படுமோ , அப்போது அதை கட்டாயம் கொடுப்பேன் என்றார்.