நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பிஜேபியால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் பரப்புரையின்போது 'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' என்று தமிழிசை பேசுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால், தமிழகத்தில் பிஜேபிக்கு கொஞ்சம் ஆதரவு உள்ள கன்னியாகுமரி, கோவை தொகுதிகளிலும்கூட அந்தக் கட்சியால் வெற்றி பெற முடியாமல் போனது. 

கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் படுதோல்வியடைந்தார்.பிஜேபியின் படு தோல்வியால் தமிழக தலைமை மாற்றப்படலாம் என்கிற தகவலும் பரவியது. விஷயம் இப்படியிருக்க, தமிழிசைக்கு அவரின் குடும்பத்துக்குள்ளேயே எதிர்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். ஏராளமான பிஜேபி தொண்டர்களும் அங்கே கூடியிருந்தனர். அப்போது, பிஜேபி தலைவர் பேட்டியளித்த இடத்துக்கு வந்த அவரின் மகன் சுகநாதன், தமிழிசை முன்னிலையிலேயே பிஜேபிக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார். தமிழகத்தில் பிஜேபி ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காது என்றும் அவர் கத்தினார். 

தமிழிசை மகனே பொது இடத்தில் பிஜேபிக்கு எதிராக கோஷம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே, அங்கிருந்த பிஜேபி தொண்டர்கள் சுகநாதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தனக்கும் தன் மகனுக்கும் குடும்ப பிரச்னை இருப்பதாகவும் அதன் காரணமாகவே பொது இடத்தில் இப்படி கோஷம் எழுப்பியதாகவும் தமிழிசை கூறிச் சமாளித்தார். 

வெயில், மழையென்று பார்க்காமல், கட்சிக்காக ஊர் ஊராக சென்று பொதுக்கூட்டம், போராட்டம் என செய்து, கட்சிசெய்யும் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுத்து, பாசிச பாஜக ஒழிக என்ற கோஷங்களுக்கெல்லாம் சண்டையிட்டு வக்காலத்து வாங்கி, தாமரை மலர்ந்தே தீரும் என்று தொண்டை தண்ணீர் வற்ற கத்தி, கேலிச்சித்திரங்கள், மீம்சுகள்,உருவத்தை கேலிப்பொருளாக்கி பேசுபவர்களை சமாளித்து, குடும்பத்தைக் கூட பொருட்படுத்தாமல் கட்சி வளர்த்து வந்தும்  தனது வீட்டுக்குள்ளேயே அதுவும் தனது மகனால், கட்சித் தொண்டர்கள் மத்தியில் இப்படி தனக்கு  ஒரு அவமானம் ஏற்பட்டதை நினைத்து கதறி அழுதாராம். மேலும், மற்ற கட்சித் தலைவர்கள் இதை சொல்லி சொல்லியே தன்னை வம்பிழுப்பார்கள் என நினைத்து கலங்கினாராம்.