tamilisai criticize kamal

அரசியலுக்கு வரப்போவதாக சொல்லும் கமலிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடுவது உறுதி என கமல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதன் முன்னோட்டமாக, தனது பிறந்தநாளன்று, மையம் விசில் என்ற செல்போன் செயலியையும் ஹேஷ்டாக்குகளையும் அறிமுகம் செய்தார். ஜனவரிக்குப் பிறகு ஒவ்வொரு அறிவிப்பாக வரும் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கற்றுக்கொள்வதற்காக என்றுகூறி கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தார் கமல். பின்னர் டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்தார். நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், கமல் அரசியலுக்கு வருவது முன்பாகவே அவரது அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற வியூகம் தவறானது என தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழலுக்கும் மதவாதத்துக்கும் எதிரானவராக தன்னை காட்டிக்கொள்ளும் கமல், இந்து இயக்கத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்ட மாநிலமான கேரளாவின் முதல்வரை சந்தித்தார். பின்னர் சிவப்பு தீவிரவாதம் நடக்கும் மாநில முதல்வரை சந்தித்தார். அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து சாரதா சிட்ஃபண்ட்ஸ் ஊழலில் சிக்கித் தவித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார் என தமிழிசை விமர்சித்தார்.

அதேபோல, கமலின் கருத்துகளும் கண்டனங்களும் ஒரு தலைபட்சமாக சுயநலம் சார்ந்தே உள்ளதால், அவரது நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ளாத கருத்து என்பதால், பா.ஜ.க-வுக்கு அவர்குறித்த எந்தக் கவலையும் இல்லை என கமலின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.