சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், ரஜினி எப்போது அரசியல் கட்சித் தொடங்குவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அறிக்கை என்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒரு கடிதம் பரவியது. அந்தக் கடிதத்தில் ரஜினியின் உடல்நலம் குறித்தும் கொரோனா காலத்தில் மக்களைச் சந்தித்து அரசியல் பணிகளில் ஈடுபடுவது குறித்து மருத்துவர்கள் தெரிவித்த அறுவுரைகள் குறித்து இடம் பெற்றிருந்தது.
இந்த அறிக்கை ரஜினி ரசிகர்களை குழப்பிய வேளையில், இது குறித்து ரஜினி ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைப் பதிவிட்டார். அதில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று ரஜினி தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்த ட்விட்டர் தகவல் அவருடைய ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருடைய ஏராளமான ரசிகர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினியை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ரஜினியின் உடல்நிலை குறித்து தமிழருவி மணியன் கேட்டறிந்ததாகத் தெரிகிறது. ட்விட்டர் தகவலில் சொல்லியதையே தமிழருவி மணியனிடம் ரஜினி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது,


திராவிட கட்சிகளுக்கு ஒரே மாற்று ரஜினிதான்; அவரால்தான் இரு கழகங்களையும் அகற்ற முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் தமிழருவி மணியன். ஆனால், உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கப்போவதாக ரஜினி தெரிவித்திருப்பது தமிழருவி மணியன் உள்ளிட்ட அவருடைய ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்றாலும் ஜனவரியில் ரஜினி நல்ல முடிவை அறிவிப்பார் என்று அவருடைய ரசிகர்களும் தமிழருவி மணியன் போன்ற ஆதரவாளர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.