நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக கடந்த 3 ஆண்டுகளாகப் பேசி வருபவர் தமிழருவி மணியன். அவரால்தான் திராவிட இயக்கங்களை தமிழகத்திலிருந்து அகற்ற முடியும்; ரஜியால்தான் தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும் என்று தொடர்ந்து பேசிவருகிறார் தமிழருவி மணியன். ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் பத்திரிகையாளார்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ஆட்சிக்கு வேறு தலைமை; கட்சிக்கு வேறு தலைமை என்று 3 திட்டங்களை அறிவித்தார். ரஜினி இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதும் தமிழருவி மணியனின் விருப்பம்.


ஆனால், அதன் பிறகு கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததால், ரஜினியின் அரசியல் என்ன?, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. ரஜினியின் அரசியல் நடவடிக்கைக்கு கொரோனா வைரஸ் முட்டுக்கட்டைப் போட்டுவிட்டதாக பொதுவெளியிலும் பேசப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு என்ற நிலைப்பாட்டிலிருந்து தமிழருவி மணியன் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாயின.
இதுகுறித்து செய்தித் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழருவி மணியன், “என்னுடைய அரசியல் வாழ்வு என்பது ரஜினி ஆதரவோடுதான் முடியும். ரஜினியால் மட்டுமே தமிழகத்துக்கு நல்ல மாற்றத்தை தரமுடியும் என்பதை உறுதியாக நம்புபவன் நான். 3 நாட்களுக்கு முன்புகூட ரஜினியை சந்தித்து பேசினேன்” என தமிழருவி மணியன் தெரிவித்தார்.