தனியார் தொலைக்காட்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவாதத்தில், பிரதமர் மோடியை கல்லால் அடிப்பார்கள் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேசியதை அடுத்து, அவரை கேவலமான பெண் என பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் விமர்சித்தார். அதற்கு உடனடியாக கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பதிலுக்கு கரு.நாகராஜனை ஒரு விளாசி விளாசிவிட்டு, அந்த விவாதத்தில் இருந்து வெளியேறினார் ஜோதிமணி. கரு.நாகராஜன் தரங்கெட்டு பேசுவதாக ஜோதிமணி விமர்சனம் செய்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில், தரத்தை பற்றி பேசும் ஜோதிமணிக்கு தமிழ் செய்தி வாசிப்பாளர் சௌதாமணி, கண்டன கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தொலைக்காட்சி விவாதத்தில் இருந்து மூன்றாம் தர மனிதரின் தரம் கெட்ட பேச்சால் வெளியேறியதாகக் கூறும் சகோதரி ஜோதிமணி அவர்களே....

ஒரு பாத்திரத்தில் விரிசல் விழுந்திருக்கிறதா இல்லையா என்பதை அதன் ஓட்டை காட்டி விடுவதைப்போல ஒரு மனிதன் ஞானியா, முட்டாளா என்பதை அவன் வார்த்தையே வெளிப்படுத்தி விடும் என்பதால் நீங்கள் எந்த ரகம் என்பதை உங்கள் பகுத்தறிவுக்கே விட்டுவிடுகிறேன்.


கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால் உலகின் சிறந்த தலைவர் என்று பல்வேறு நாடுகளால் போற்றப்பட்ட ஒரு தலைவரை, தன்னுடைய சாமர்த்தியமான அணுகுமுறையால் கொரோனா   வைரசிடமிருந்து அதிக சேதாரமின்றி நாட்டையும், மக்களையும் காத்த ஒரு தலைவரை, 130 கோடி மக்களின் பிரதிநிதியான நமது பாரத பிரதமரை  ‘கல்லால் அடிப்பார்கள்’ என்பது உங்களுக்கு யார் கொடுத்த தைரியம்? 70 ஆண்டுகளாக நாட்டை சூறையாடி, வன்முறை வெறியாட்டங்களுக்கு வித்திட்ட ஒரு கட்சியை சேர்ந்த நீங்கள் இப்படி பேசுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான். 

1000 பேருந்துகளுக்கு சவால் விட்டு, உ. பி. முதல்வர் யோகியிடம்,ஆட்டோ, சரக்கு வாகனம், ஸ்கூட்டர் என 50 வாகனங்களுக்கு  கணக்கு காட்டிய பிரியங்காவின் வழிநடப்பவரான நீங்கள்,  விவாதங்களில் பங்கேற்கும் போது பொய்யை உரக்கச் சொல்லும் மதியின்மை கண்டு, பாஜகவினரே நீங்கள் கலந்து கொள்ளும் விவாதங்களில் பங்கேற்பதில்லை என்ற உண்மையை ஊடக உலகம்  அறியும். 

புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் எத்தனை கோடி தொழிலாளர்களை எத்தனை ரயில்களில், பேரூந்துகளில் அனுப்பி வைத்தார்கள், அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே தெரியாமல், மத்திய மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளையும் மறைத்து, அரசின் ஏற்பாட்டில் தங்கள் முறை வரும் வரை காத்திருக்க பொறுமையில்லாமல் நடந்து செல்வோரை தடுத்து நிறுத்தவா முடியும் என நீதிமன்றம் சொன்னதும் தெரியாமல், ஊடக விவாதத்தில் பிற விருந்தினர்களையும் பேச விடாமல் ஊடே சென்று பேசுவதையே வழக்கமாகக் கொண்ட நீங்களா தரம் குறித்து பேசுகிறீர்கள். பிரதமர் பார்க்கும் வேலை என்பது மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு ஊ லலலா... என்று பாடிச் செல்வது போன்றது என நினைத்து விட்டீர்களா? 

பிரதமரை கல்லால் அடிப்பார்கள் என்ற நீங்கள் தானே அதே பிரதமர் பதவியேற்பின்போது, வணக்கம் செய்ய கடைசி வரிசையிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்து தன் இருப்பைக் காட்ட முயன்றீர்கள். 

உங்கள் 3 மாத ஊதியமான 7 லட்சம், எம் எல் ஏ நண்பரின் 8 கோடியும் செலவு செய்து எம். பி - யை விட எம் எல் ஏ சம்பளம் அதிகம் என்பதையும் எங்களுக்கு தெரியப்படுத்தி விட்டீர்கள்.

ஆமா என்ன சொன்னீங்க... கீழ்த்தரமாக செயல்படுபவர்களை ஊக்குவிக்க சமூக வலைத்தளத்தில் பிரதமர் பின் தொடர்கிறார் என்றா? உல்லாச வாழ்க்கை தேடி ஊர் ஊராகச் சென்று மாதக்கணக்கில் தலைமறைவாகும் ஒருவரை தலைவராக கொண்டவரின் காமாலை கண்ணுக்கு தேசத்தை நேசிக்கும் ஒரு தலைவரின் உழைப்பும், பொறுப்பும், நேர்மையும் அக்கறையும் எங்கே புரிந்து விடவா போகிறது?   

ஆறடி உயர மனிதனின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் நாலங்குல நாக்குதான் காரணமென்பார்கள். அதே ஆறடி உயரம் கொண்ட நீங்கள், பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் வம்சம் என்று கூறும் நீங்கள், “யாகாவாராயினும் நா காக்க” என்று வள்ளுவன் கூறியதை மறந்ததால் தானே “சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற நிலைக்கு வந்தீர்கள். 

விவாதத்தின் தரமா?... அதுதான் தேஜஸ்வி சூர்யா எம். பி- யுடனான விவாதத்தில் நீங்கள் தரமாக வறுத்தெடுக்கப்பட்டதையும் பார்த்தோமே. 

கரு. நாகராஜன் அவர்கள் அப்படி பேசியிருக்கக் கூடாதுதான். ஒரு பெண்ணாக நானும் அதை எதிர்க்கிறேன். ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் ஒரு பெண் பல போராட்டங்களை சந்தித்து தான் மேலே வரமுடியும் என்பது எழுதப்படாத விதி. அந்த வகையில் உங்கள் உழைப்பால் எம். பி பதவியை அலங்கரிப்பதை நான் பாராட்டுகிறேன். ஆனால் இங்கிதம் தெரியாமல், அரசமைப்பு சட்டம் தெரியாமல் நமது பிரதமரை கல்லால் அடிப்பார்கள் என்று சொல்லும்போது, உங்கள் எண்ணத்தில் உதித்த வன்மத்தை பாஜகவை சார்ந்தவர் எதிர்க்காமல்  சும்மா இருப்பாரா? விவாதங்களில் பல முறை பிரதமரை தரக்குறைவாகவும், வன்முறையைத் தூண்டும் வகையில் ஒரு பெண் தீவிரவாதியைப் போல பேசும் நீங்கள், செல்லரித்துப்போன சிந்தனையைக் கொண்டவர் என்பது உண்மையன்றோ.   உங்கள் பிரதமரைக் கொன்ற தனுவும், உடந்தையாக இருந்த நளினியும் பெண் தான். அதற்காக அவர்களை ஆதரிக்கவா முடியும். கரு நாகராஜ் அவர்கள்  அப்படி பேசுபவருமல்ல. பேசக் காரணம் உங்கள் நாவை அடக்கத் தவறியது தானே? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு தானே? ஆனால் வருத்தம் தெரிவித்த  அவரின் பெருந்தன்மை உங்களிடம் இல்லாததுதான் உங்கள் தரம். 

என்ன பாஜக ஆபாச அரசியலை முன்னெடுக்கிறதா?  உங்க கட்சியின் நேரு முதல் ராகுல் வரை, தோழமை கட்சியின், ஈ. வே  ரா முதல் உதயநிதி ஸ்டாலின் வரை பேசிய பேச்சின் ஆபாச அழிமதிகளின் வரலாற்றை நன்றாகப் படித்து விட்டு இதைக் குறித்து நாம விரிவாகப் பேசலாமே. விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கவுரவமாக வளர்ந்த நீங்கள் இப்போது நிலை தடுமாறி, தரம் தாழ்ந்து நடக்க காரணம் எதாவது ஏமாற்றமோ? 

கண்ணியம்.... ஆமா தமிழக பாஜகவினர் கண்ணியமாக நடந்து கொண்டதால் தான் பிரதமரை அப்படி பேசிவிட்டு உங்களால் வீட்டில் இருக்க முடிகிறது. இதுவே வேறு மாநிலமாக இருந்திருந்தால்  உங்களை கருங்கல்லால் அடித்திருப்பார்கள். இனியேனும் மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல் பேசத்துணியாமல் கேட்பவர் ஆன்மாவை நெகிழச் செய்யும் கனிவான பேச்சுக்களை முன்னெடுத்து, பெண்மையின் சிறப்பை உலகறியச் செய்யுங்கள் சகோதரியே என்று சௌதா மணி தெரிவித்துள்ளார்.