Asianet News TamilAsianet News Tamil

யூத் எல்லாம் இப்போ எடப்பாடி பக்கம்..! தெறிக்கவிடும் முதல்வர் பழனிசாமி

மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச டேட்டா, 9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ், பெரிய நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்து, வேலை வாய்ப்புக்கு வழிவகுப்பது என்று தொடர்ந்து நலத்திட்டங்களால் இளைஞர் பட்டாளத்தை தன் பக்கம் சாய்த்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

tamil nadu youngsters full support to chief minister edappadi palaniswami
Author
Chennai, First Published Feb 28, 2021, 8:37 PM IST

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் இந்த தருணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல நலத்திட்டங்களை தீவிரமாக அறிவித்து வருகிறார். எல்லோருக்கும் ஏற்றவகையில் நலத்திட்டங்கள் அமைய வேண்டும் என்பதில் கருத்தாய் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நாட்களில் அவர் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் பெரும்பாலான மக்களை கணிசமாக கவர்ந்துள்ளது. கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த விவசாயிகளின் பயிர்கடன்களையும், ஏழை,எளிய மக்களின் நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து கூட்டுறவு வங்கியில் மகளிர் சுயஉதவி குழு வாங்கியிருந்த கடன்களையும் தள்ளுபடி செய்ததாக அறிவித்தார்.  வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள், திருமணம் ஆகும் பெண்களுக்கு எட்டு கிராம் தங்கம், மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ரூ18,000 நிதி உதவி தொகையும், குழந்தை பிறந்த பின் 16 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம், வயதானவர்களுக்கு முதியோர் உதவி தொகை  என அனைத்து தரப்பு வயது பெண்களுக்கு பல நலத்திட்டங்களை அமைத்தார் முதல்வர். அதிமுக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கு படிக்கட்டுகள் அமைக்கும் அரசு என்பது நாடறிந்த ஒன்று, தற்போது அது நிரூபணமாகிவிட்டது. பெண்கள் நலனுக்காக நலத்திட்டங்கள் செயல்படுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. இப்படி தேர்தல் நெருங்கும் நேரத்திலும் மக்கள் நலனை பற்றியும் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

 

அப்படி பார்க்கும் வகையில் இந்த நலத்திட்டங்கள் இளைஞர்கள் வட்டாரத்திலும் பெரிதளவில் பயனுள்ளதாக  அமைந்துள்ளது என்று தான் கூறவேண்டும். கொரோனா காலத்தில் மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள் வரை நிறைய இடர்களை சந்தித்துள்ளனர். மாணவர்கள் மத்தியில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவானது, பாடத்திட்டங்களை வீட்டிலிருந்தபடியே படிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவி செய்தார். இணையவழி அல்லது தொலைக்காட்சி வழியில் பாடங்களை படிக்க சாத்தியக்கூறுகளை அமைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இணையவழி கல்வி பயில கல்லுரி மாணவர்களுக்கு தினமும் 2GB இன்டர்நெட்டையும் இலவசமாக வழங்கினார். இதன் மூலம் மாணாக்கர்கள் ஊரடங்கிலும் கல்வி பயில வழிவகுத்து வந்தது போற்றுதலுக்குரியது. தற்போது கொரோனா நோய் தொற்றின் வீரியம் குறையாத நிலையில் மாணவர்கள் பொது தேர்வை எழுதுவது மிகவும் ஆபத்தானது என்று 9,10, மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுகள் எதுவுமின்றி தேர்ச்சி பெற்றனர் என்று சட்டப்பேரவையில் நேற்று  அறிவித்தார். மாணவர்கள் நலனை கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்ட இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் நிம்மதியை உருவாக்கியது. இது மிகவும் சிறப்பான செயல் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

 

அதே போல் கொரோனா நோய் தொற்றின் போது வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பலர் வேலைவாய்பு  இல்லாமலும், பலபேர் பணியிலிருந்து நீக்கப்பட்டும், பாதி  ஊதியத்திற்கு வேலை செய்ய வேண்டிய அவல நிலைக்கும் தள்ளப்பட்டனர். ஊரடங்கின் போது பணி இல்லாமல் பலர் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய சிரமமாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். அதனை சீரமைக்கும் வகையில் குடும்பத்துக்கு தலா ரூ1000 வழங்கினார். ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, எண்ணெய் என்ற அத்தியாவசிய பொருட்கள் டிசம்பர் மாதம் வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்தார். மேலும், தற்போது தமிழகத்தில் அநேக தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இளைஞர்கள் அநேகருக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் பெரும் வாய்ப்பினை அமைத்து கொடுத்துள்ளார். இத்தகைய நலத்திட்டங்கள் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெரிதளவில் ஈர்க்கப்பட்டுள்ளது, நாளைய எதிர்காலமான இளைஞர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் வகையிலும், மேம்படுத்தும் வகையிலும்  முதல்வரின் நலத்திட்டங்கள் அமைய பெறுகிறது. அவர்கள் படிப்பதும், வேலை பார்ப்பதும் அவசியம் என்று  வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். பொதுவாக குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமான விஷயம் அப்படி இருக்க, கொரோனா தொற்றின் போது வேலையையும் இழக்க நேரிட்டால், அவற்றினை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அவை எல்லாவற்றையும் மனதில் வைத்து மோசமான நிலையினை அடையும் முன்னே அவற்றை இயல்பு நிலைக்கு மாற்றி அமைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

தனது ஆளுமையாலும், அறிவிப்பின் மூலமாகவும், எளிய மொழி மற்றும் பண்பு மூலமாகவும் அனைத்து தரப்பு மக்களை தன்வசம் ஈர்த்த முதல்வர் பழனிசாமி. இது போன்று அறிவிப்புகள் மூலம் இளசுகள், பெண்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார் என்பது மறுக்கமுடியாத உண்மை.

Follow Us:
Download App:
  • android
  • ios