தமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழியில் கூட்டணி அமைப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது. 

ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கடலுார் ஆகிய  நாடாளுமன்றத் தொகுதியின், பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில்  தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி குறித்து பேசினார். அந்தக் கலந்தாய்வில் பேசிய மோடி, “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. தேசிய அரசியலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமான கூட்டணியை அமைத்தவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய். கூட்டணி விஷயத்தில், வாஜ்பாய் காட்டிய வழியை பின்பற்றுவோம்” என்று குறிப்பிட்டு பேசினார்.

 

பிரதமர் மோடியின் பேச்சில் இரண்டு அர்த்தங்கள் வெளிப்படுகின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய் அமைத்த கூட்டணியைப் போல தமிழகத்தில் அமைப்போம் என்று மோடி கூறுகிறார். சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் வாஜ்பாய் கூட்டணி ஏற்படுத்தியிருந்தார். 1998ஆம் ஆண்டில் அதிமுகவுடன் வாஜ்யாப் முதன் முறையாக கூட்டணி அமைத்தார். தேர்தலில் அந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது அமைந்த பாஜக ஆட்சியை 1999-ம் ஆண்டில் வெறும் 13 மாதங்களிலேயே ஜெயலலிதா கவிழ்த்தார். 

இதன்பிறகு திமுகவுடன் வாஜ்பாய் கூட்டணியை அமைத்தார். அந்தக் கூட்டணியும் தமிழகத்தில் வெற்றி பெற்றது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழி என்றால், அது இதுதான். அப்படியென்றால் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி என்பதைத்தான் மோடி கோடிட்டு காட்டியிருக்க வேண்டும். 1999-ல் அதிமுக ஆதரவை வாபஸ் வாங்கிய பிறகு திமுகவிடம் வாஜ்பாய் பேசி ஆதரவைப் பெற்றார். 

நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக திமுக வாக்களித்தது. ஒரு வேளை தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக திமுகவின் ஆதரவைப் பெற மோடியும் தயங்கமாட்டார் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாஜ்பாய் அமைத்த கூட்டணி என்பதுதான் இது. இதில் மோடியின் சாய்ஸ் என்னவென்பது தேர்தலுக்கும் முன்பும் பின்பும் வெளிப்படலாம் என்றே தோன்றுகிறது.