மத்திய அரசின் பதில் கிடைக்காததால் தமிழகத்தில் என்.பி.ஆர். கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்;- காங்கிரஸ் ஆட்சியில் தான் என்.பி.ஆர்., கொண்டுவரப்பட்டது. முதன்முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் குறித்து என்.பி.ஆர்., குறித்து விவாதம் நடக்கிறது. 2002-ம் ஆண்டு எடுக்கப்பட்ட என்பிஆர், விட 2020-ல் எடுக்கப்படும் கணக்கெடுப்பில், 3 அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. 

இந்த 3 அம்சங்கள் தான் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், பல்வேறு தடைகள் உள்ளது. இந்த அச்சத்தை போக்கும் வகையில், மத்திய அரசு 3 அம்சங்களிலே திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசும், முதல்வரும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், இதற்கான பதில் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. ஆகையால், தமிழகத்தில் என்.பி.ஆர். கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். என்.பி.ஆர். குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவல்களை கொடுகின்றனர். என்பிஆர் போது எந்த ஆவணங்களும் அவசியமில்லை. கணக்கெடுப்பின் போது தனி நபர், கொடுக்கும் தகவல்கள் அப்படியே பதிவு செய்யலாம். இதற்கு எந்த ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.