தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அவர் ராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 625ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தீவிரமாக உள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த கே.பி.அன்பழகன் பெருங்குடி, அடையாறு, சோழிங்க நல்லூர் மண்டலங்களில் பணியில் ஈடுபட்டிருந்தார். 

இந்நிலையில், அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அவரை ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பதால், வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடரலாம் என கேட்டுக் கொண்ட போதும், அவர்  மருத்துவமனையிலேயே தங்கி சிசிச்சை பெற விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், அமைச்சருடன் தொடர்பில் இருந்த அவரது உதவியாளர் உள்ளிட்ட 3 பேருக்கு நோய் அறிகுறிகள் இருப்பதால் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.