இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை 1683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தபோதே ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே அவர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டதுடன், ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. 

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, அரிசி, பருப்பு இலவசமாக வழங்கினால் மட்டும் போதாது; மற்ற மளிகை பொருட்கள் வாங்க ஏழை மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்ற எதார்த்தை புரிந்த தமிழக அரசு, மிளகு, சீரகம், கடுகு, மிளகாய், வெந்தயம், பூண்டு, மஞ்சள் தூள், டீ தூள் என 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ.500க்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது. 

ரேஷன் கார்டு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து, ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் கூட, ரூ.500க்கு இந்த மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.