கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்று ஒரே நாளில் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 309ஆக அதிகரித்துள்ளது. இந்த 309 பேரில் 264 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். 

கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுபகாரியங்கள், இறப்பு ஆகிய தவிர்க்க முடியாத முக்கியமான பயணங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் பாஸ் பெற்று பயணம் மேற்கொள்ளலாம் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக தாசில்தார்களிடமும் மாநகராட்சி ஆணையருக்கு பதிலாக துணை ஆணையரிடம் பாஸ் பெறலாம் என்று பாஸ் வழங்கும் அதிகாரங்கள் தாசில்தார் மற்றும் துணை ஆணையருக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், அவர்களின் பாஸ் வழங்கும் பணி திருப்தியளிக்கும் விதமாக இல்லை. ஏராளமானோர் சாலைகளில் திரிவதை பார்க்க முடிகிறது. எனவே பாஸ் வழங்கும் அதிகாரத்தை உடனடியாக மாற்றி உத்தரவிட முதல்வர் உத்தரவிட்டதாக கூறி, மீண்டும் பாஸ் வழங்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு வழங்கி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார். கல்யாணம், மருத்துவமனை, இறப்பு ஆகிய முக்கியமான சம்பவங்களுக்கு மட்டுமே பாஸ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.