ஜெயலலிதாவின் வாரிசாக எங்களை நீதிமன்றமே அறிவித்துள்ள நிலையில் வேதா இல்லத்தில் எங்களுக்கே உரிமை உள்ளது என ஜெ.தீபா கூறியுள்ளார். 

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெ.தீபா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கான மதிப்பீடு தொகை ரூ.68 கோடி என்பது தவறானது. அரசு செய்தது அத்துமீறிய செயல் வீட்டின் மதிப்பை நிர்ணயித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டோம். வீட்டில் இருந்த பொருட்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை. எங்களுக்கு பணம் தேவையில்லை என்றும் ஜெ.தீபா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களாக உயர்நீதிமன்றம் எங்களை அறிவித்துள்ளது. 

வேதா இல்லத்தில் உள்ள பொருட்கள் விவரம் குறித்து எங்களுக்கு தெரிவிக்கவில்லை. நிலத்தை கையகப்படுத்த மட்டுமே  அரசால் முடியும். பொருட்களை எடுக்க முடியாது. தமிழக அரசு எங்கள் சொத்துகளை அபகரித்துள்ளது என ஜெ. தீபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.  வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எப்படி அரசு அறிவிக்கலாம் என  ஜெ. தீபா கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்கள் பூர்வீக சொத்து. எங்கள் பூர்வீக சொத்தை அரசுடைமையாக்குவதில் உடன்பாடில்லை. வாரிசுகள் யாருமே இல்லை என்று அரசு அறிவித்தது எப்படி? எங்களுடைய ஆட்சேபனைகள் எதுவும் ஏற்கப்படவில்லை.

மேலும், சமூக சேவை நிறுவனங்களை ஜெயலலிதா பெயரில் அதிமுக தொடங்காதது ஏன்? தேர்தல் பிரசாரத்தில் மட்டும்தான் ஜெயலலிதா பெயரை உச்சரித்தார்கள். ஜெயலலிதாவின் வாரிசுகளான நாங்கள் மிகவும் எளிய வாழ்க்கையே வாழ்கிறோம். அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்தே வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குகிறார்கள். வேதா இல்லத்தை விட்டுவிடுங்கள். ஜெ. இல்லத்தை கையகப்படுத்தியது அடக்குமுறை. உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்வோம். ஜெயலலிதா போயஸ் இல்லம் விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும். நியாயம் கிடைக்க அதிமுக தொண்டர்கள் துணைநிற்க வேண்டும் என ஜெ. தீபா கூறியுள்ளார்.