இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 7000ஐ நெருங்கிவிட்டது. 220 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை மளமளவென உயர்ந்துவருகிறது.

தமிழ்நாட்டில் 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டாலும், பாதிப்பு எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

எனவே மக்கள் நலன் கருதி ஏற்கனவே வரும் 14ம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனையில் முதல்வர்கள், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்திருந்தார். 

மீண்டும் நாளை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ளார். இதற்கிடையே, நாட்டிலேயே முதல் மாநிலமாக ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் நிலைப்பாடு குறித்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமியிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, 19 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடனும் ஏற்கனவே தமிழ்நாடு முழுதும் தடுப்பு பணிகளில் செயல்பட்டு கொண்டிருக்கும் 12 குழுக்களுடனும் ஆலோசித்து, கொரோனாவின் தீவிரத்தை பொறுத்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

நாளை பிரதமருடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசு நியமித்த 19 மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் முதல்வர் பழனிசாமி சற்று முன் ஆலோசனை நடத்தினார். 

அந்த ஆலோசனை முடிந்த பின்னர் மருத்துவர்கள் குழு சார்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவர் பிரதீபா, தமிழ்நாடு அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசு சார்பில் நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டுவருகின்றன. எனினும் கொரோனாவை கட்டுப்படுத்த 14ம் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வரிடம் மருத்துவர்கள் குழு சார்பில் பரிந்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நாளை பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் முதல்வர் கலந்துகொள்ளவுள்ள நிலையில் நாளை மாலை 5 மணிக்கு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டமும் கூடவுள்ளது.